வரலாற்றில் முதன் முதலாக பெரு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 1500 ஏக்கர் வயல் நில சிறுபோக வேளாண்மை செய்கைக்காக யான் ஓயா நீர்ப்பாசன திட்டத்தினூடாக நீர் வழங்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு புல்மோட்டையில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட ஏற்பாட்டில் இன்று (02) புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆரம்ப கலந்துரையாடல் இடம் பெற்றது.
விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி அவர்கள் பங்கேற்புடன் விவசாயிகளின் பிரச்சினைகள், நீர்ப்பாசன விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் ஏ.எல்.ஜௌபர்,குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன், பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, திருகோணமலை மாவட்ட முன்பிள்ளை பருவ நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆதம்பாவா தௌபீக், விவசாய திணைக்கள உயரதிகாரிகள், விவசாய சம்மேளனங்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் சங்க பிரதிநிதிகள்,மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் சம்மேளன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.