அமைச்சுப் பதவிகளை யார் வகிக்க வேண்டும் என்பதான நிலைமை சிறுபான்மைச் சமூகத்தின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளதாகவும் சமூக அபிலாஷைகளுக்காக செயற்படும் நாம், அந்தப் பதவிகளுக்காக யாரிடமும் கையேந்தப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று மாலை (01) வவுனியா, பட்டாணிச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அவர் மேலும் கூறியதாவது,
“மக்களின் ஆணையை மதித்து, அமைச்சுப் பதவிகளை தூக்கியெறிந்து, புதிய அரசாங்கத்தை உருவாக்க வழியமைத்துக் கொடுத்தவர்கள் நாங்கள். பதவிகளை நாம் ஒருபோதுமே பொருட்டாக எண்ணியவர்கள் அல்லர். “அமைச்சுப் பிச்சை” கேட்டு அலைந்தவர்களும் இல்லை. மற்றவர்களின் மடிகாலில் விழுந்தவர்களும் அல்லர். ஏமாந்தவர்களும் அல்லர். அதற்காக சொரம்போகவும் மாட்டோம்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் இரண்டு அணிகளுக்கிடையிலான போட்டிக் களப் பரீட்சையாகப் பார்க்கப்படுகின்றது. இன நல்லுறவையும் சமூக ஒற்றுமையையும் செயல்படுத்தும் அணியில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவும், சிறுபான்மை மக்களை அடக்க வேண்டும், அவர்களின் உரிமைகளைப் பறித்தெடுக்க வேண்டுமென திட்டமிட்டு செயற்படும் மற்றைய அணியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவும் போட்டியில் இறங்கியுள்ளனர். இந்தப் போட்டியில் இன ஒற்றுமைக்காகப் பாடுபடும் அணியில் சிறுபான்மைக் கட்சிகளும் முற்போக்குச் சிந்தனையுள்ள கட்சிகளும் கைகோர்த்துள்ளன.
எனவே, சிறுபான்மை மக்களாகிய நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானித்திருப்பீர்கள். இந்தப் பெருந்திரளான கூட்டம் அதற்கு சான்றும் பகர்கின்றது.
வன்னிப் பிராந்தியத்திலே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு குந்தகமாகச் செயற்படும் அணியில் போட்டியிடும் வேட்பாளருமான ஒருவர், தமக்கு வாக்கு வழங்குமாறு மக்களிடம் கோரி வருகிறார். “நான் அமைச்சராகப் போகின்றேன், நான் அமைச்சராகப் போகின்றேன்” என அங்குமிங்கும் ஓடித்திரிகின்றார். இந்த எட்டு மாத ஆட்சியில் இவர்களைப் போன்றவர்கள் நமது சமூகத்துக்கு எதைச் செய்திருக்கின்றார்கள்? “ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லையே!” என சர்வதேச பிரபலமான செய்தி ஊடகமொன்று ஜனாதிபதியிடம் ஒருமுறை கேட்டபோது “தகுதியான முஸ்லிம்கள் எவரும் எமது கட்சியில் இல்லை” என அவர் பதிலளித்தார். அப்போது, ஆளுங்கட்சி சார்பாக இருந்த இருவரில், வன்னி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருவர். ஜனாதிபதியின் வெற்றிக்காக வன்னியில் ஒவ்வொரு மூலைமுடுக்குகளுக்கும் சென்று, மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கியவர். “அது செய்வோம், இது செய்வோம்” என ஆசை வார்த்தைகளைக் கூறியவர். எனினும், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அப்போது பதவி கொடுக்காதவர்கள், இப்போது அமைச்சர் பதவியைக் கொடுப்பதற்கு இவரிடம் ஏதாவது தகுதி, தராதரங்களைக்கண்டிருப்பார்களா எனக் கேட்கின்றேன்.
இறைவனின் நாட்டமின்றி எதுவுமே நடக்கப்போவதில்லை. யுத்த வெற்றியின் பின்னர், அமோக ஆசனங்களுடன் ஆட்சியமைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இன்னும் கால்நூற்றாண்டுக்கு அசைக்க முடியாதென பலர் கூறினர். அவருக்கென இலங்கையின் பல இடங்களில் மாளிகைகளும் கட்டப்பட்டன. எனினும், நான்கு வருடங்களில் சாஸ்திரக்காரர் ஒருவரின் கதைகளைக் கேட்டு, முற்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினர். இறுதியில் என்ன நடந்தது? பூனை போல இருந்த ஒருவரிடம் தோல்வியடைந்த வரலாறுகளை, இப்போது வீராப்பு பேசுபவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டும். அநியாயங்களை இறைவன் என்றுமே பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்.
மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரையில், பிரிந்த இனங்களையும் பிரிந்த உள்ளங்களையும் ஒன்றிணைத்த கட்சி. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, சமாதானப் பாலத்தை அமைத்து பயணிக்கும் கட்சி. அதனை செயலில் காட்டிக்கொண்டிருக்கும் கட்சி. இறைவனின் உதவியும் எமது நேர்மையான பணிகளும், இந்த வெற்றிக்குக் காரணம். எமது இருபது வருட அரசியலில், நல்ல பணிகளை செய்திருக்கின்றோம். நேர் எதிரியானவர்களுக்குக் கூட அவர்களின் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி, சமூக அந்தஸ்துள்ளவர்களாக மாற்றியுள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக், ரொஹான் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.