இந்து மற்றும் பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன் . முஹம்மது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான , சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு, சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும் )எதிராக வெகுண்டெழுந்தவர் .
பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள் , வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் நிலவிவந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதை ஏற்றுக்கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும், தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையில், கலவர பூமியான அரேபியப் பாலைவனத்தில் அமைதியை ஏற்படுத்தியவர் .
கிறித்தவர்கள் இந்த கூட்டமைப்பில் சேர்ந்த பொழுது, மதம் மாறாமலேயே அவர்களுக்கும் அந்தப் பாதுகாப்பை அளித்தவர். அவர்களை இஸ்லாம் ‘People of the book’ (Bible ) என்று அவர்களது சொந்த அடையாளங்களுடனே அங்கீகரிக்கிறது .
ஒரே ஒரு தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தைத் தவிர வன்முறையை முன்னிருத்தாதவர் . மதினாவிலிருந்து மக்காவுக்கு தனது மக்களோடு உயிருக்கு ஆபத்தான சூழலில் நிராயுதபாணியாகச் சென்று போரில் வெல்லமுடியாத மக்கா மக்களை வென்றெடுத்தவர்.
வன்முறையை அல்ல அமைதியை, பேரன்பை ,கருணையை, சமதர்மத்தை முன்னிருத்தியவர். ஜிகாத் -புனிதப்போருக்கு இஸ்லாத்தில் எந்த இடமும் இல்லை .
பெண்களுக்கான சுதந்திரத்தை, கல்வியை, சொத்துரிமையை என பல நூற்றாண்டுகளுக்கே முன்பே வலியுறுத்தியவர். எளிய வாழ்வையும், சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிருத்துகிறது . ஏழை – பணக்காரன் என்ற வேறுபாடுகளை ஏற்க மறுக்கிறது. பிற்போக்கான மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பொதுபுத்திக்கு மாறாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக (Strikingly Progressive ) இருக்கிறது .
இன்று மத அடிப்படை வாதிகள் முன்னிருத்துகிற இஸ்லாத்துக்கும் ,உண்மையான இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தாலிபான்களும் , ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளும் இஸ்லாத்தின் பெயரால் செய்கிற அட்டூழியங்களும் ,அவற்றையே உண்மையான இஸ்லாத்தின் பிரதிநிதிகள் என்று விமர்சிப்பதுபோல் சித்தரிக்கும் போக்கும் ஆபத்தானது .
உண்மையான முஸ்லிம்களுக்கு அதை எதிர்த்து நிற்கவேண்டிய சவால் காத்திருக்கிறது. அதை எதிர்கொள்வது எளிதானதல்ல. மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மத அடிப்படைவாதிகளை ஊட்டி வளர்க்கிறது .
இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது.
இன்றைய சூழலில் அந்தக் கடினமான பணியில் அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய மாபெரும் தார்மீகப் பொறுப்பு மற்றவர்களிடம் உள்ளது. மதத்தை (எந்த மதமானாலும்)அரசியல், பொருளாதார சுயநலனில் இருந்து விடுவிப்பதிலே தான் இந்த உலகின் அமைதி அடங்கியிருக்கிறது .