Breaking
Mon. Dec 23rd, 2024
நூறுநாள் வேலைத்திட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில் அவரின் நிதானம் வெளிப்பட்டிருந்தது. அவர் ஆற்றிய உரையில் சமகால அரசியலில் சலசலப்புச் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நிறைந்த புத்திமதிகளைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளாதவர் அல்ல நான். அதிகாரங்களைக் கையில் எடுக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாகவே அமைதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரியின் மேற்போந்த உரையில் இருந்து அவரின் நிதானம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயந்தவர் என்றோ அல்லது அரசியலை நடத்த வல்லமை அற்றவர் என்றோ யாரும் நினைத்துவிடக் கூடாது.

ஏனெனில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை எதிர்த்து தேர்தலில் நின்ற மிக உயர்ந்த வீரம் மைத்திரியிடமே இருந்தது. ஜனாதிபதித் தேர்தல் மகிந்த ராஜபக்­ வெற்றி பெற்றால், நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த மைத்திரி, மகிந்தவின் மிரட்டலை துச்சமாக மதித்து தேர்தல் களத்தில் இறங்கினார்.

என்னோடு போட்டியிட இருக்கும் அந்த வீரன் யார்? என்று அறிய ஆவலாக இருக்கிறேன் என மகிந்த ராஜபக்­ கர்ச்சித்தார். யாருமே தன்னை எதிர்த்துப் போட்டியிட முன்வர மாட்டார்கள். அப்படி வந்தால் அவர்களை என்ன செய்வேன் என்பது தெரியும் தானே? என்ற தடிப்பில் கர்ச்சித்த மகிந்தவுக்கு அமைதியாகப் பதில் கொடுத்து உன்னோடு போட்டியிடும் மாவீரன் இந்த மைத்திரி என்று களமிறங்கியவர் தற்போதைய ஜனாதிபதி.

ஆக, மகிந்த ராஜபக்­வோடு போட்டியிட்டால் தனக்கு மட்டும் அல்ல; தன் சந்ததிக்கே ஆபத்து என்றிருந்த சூழ்நிலையில் இலங்கைத் திருநாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தன் கடமை என்று கூறி தேர்தல் களமிறங்கிய மைத்திரியை எவரும் சாதாரணமாக எடைபோட்டுவிடக் கூடாது. சுருங்கக் கூறின் இந்த நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத துணிச்சல் மைத்திரியிடம் இருந்தது.

பொதுவில் எங்கள் நாட்டில் இருக்கக்கூடிய ஒரு பெரும் பலவீனம்; நல்ல குணத்தை பலவீனமாகக் பார்ப்பது.இந்த வகையில்தான் ஜனாதிபதி மைத்திரியையும் அரசியல்வாதிகள் சிலர் பார்க்கின்றனர். இதன் காரணமாக மைத்திரியின் அரசுக்குத் தொந்தரவு செய்ய இவர்கள் தலைப்பட்டுள்ளனர்.

எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்­ கைது செய்யப்பட்டதை அடுத்து, மைத்திரியின் ஆட்சியைக் குழப்பும் நோக்கில் ஆர்ப்பரித்த அரசியல்வாதிகள் சிலர் பயத்தால் நிலத்தில் வீழ்ந்து பாதுகாப்புத் தேடுகின்றனர்.

எனினும் இன்னும் சிலர் கைது செய்யப்படக் கூடும் என்ற தகவல்களும் தேசியக் கொடியில் மாற்றம் செய்தவர்களைத் தண்டிக்க நீதித்துறை தயாராகிவிட்டதென்ற தகவலும் நாட்டில் அமைதியை நிலைநாட்டும் போல் தெரிகிறது.

எதுவாயினும் ஜனாதிபதி மைத்திரி பொறுமைக்கு எல்லையிட்டு; மகிந்தவை எதிர்த்து தேர்தலில்கள மிறங்கியது போல, நாட்டில் அமைதியை ஏற்படுத்து வதற்காக களத்தில் குதித்து சமராடுவது அவசியம்.

அப்போதுதான் மகிந்தவின் ஆதரவாளர்கள் அடங்குவர். நாட்டைக் குழப்பலாம் என நினைப்பவர்களும் மடங்குவர்.mn

Related Post