நீண்டகாலமாக இடம்பெயர்ந்த யாழ் முஸ்லீம் மக்களை விரைவாக மீள்குடியேற்ற பொறிமுறை ஒன்றினை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே 86, ஜே 87 மற்றும் ஜே 88 கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதன் பின்னர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2010ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 8வருடங்களாக நான் எமது மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளில் நான் கவனம் செலுத்தி வருகின்றேன் இதற்கு எமது மக்கள் சாட்சியாக இருக்கின்றார்கள். எமது மக்களை உணர்சிவயப்படுத்தி வழிநடாத்த நான் விரும்பவில்லை.ஏன் எதற்கு என்ற விளக்கத்தோடு மக்கள் எங்களைப் பின் தொடரவேண்டும் என்பதுவே எனது விருப்பமாகும். இதனை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
எமது மக்களின் மீள்குடியேற்றத்திலே இருக்கின்ற மிகப்பிரதானமான தடை அவர்களுக்கான அரசியல் தலைமைத்துவம் யார் என்பதுதான். அதனை நாம் தீர்மானிக்க வேண்டும். எம்முடைய தேவைகள் எம்முடைய பிரச்சினைகள் எமக்கான தீர்வுகளை பாராளுமன்றத்திலே அல்லது உரிய அமைச்சு மட்டங்களிலே முன்வைப்பதற்கு எவரும் இல்லை என்ற சூழ்நிலை கடந்த காலங்களில் உருவாகி இருந்தது.இவ்வாறான சூழலில் எமக்கான பாராளுமன்றப் பிரதிநிதி யார்? என்ற கேள்வி எமக்கு முன்னால் வந்தது.ஆனால் தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் எமது மக்களுக்காக குரல் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர்எனினும் தற்போது எமது கட்சித்தலைவர் றிசாட் பதியுதீன் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த அகதிகளை குடியேற்றல் என்ற அமைச்சினை பெற்றிருக்கிறார். இந்த அமைச்சு ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் முயற்சிக்கின்றேன்.
முஸ்லிம் சமூகத்திலே பல பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமக்கான அதிகார எல்லைகளைக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அமைச்சர் றிசாத் மட்டுமே எல்லை கடந்து எமது மக்களுக்காக அன்று தொடக்கம் இன்று வரை குரல் கொடுக்கின்றார்.உதவுகின்றார். இதனை நாம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் பல மீள்குடியேற்றத்திற்கான நடமாடும் சேவைகள் அவர் முயற்சியினால் நடைபெற்றன.இன்னும் அமைச்சர் ஊடாக இங்கு இடம்பெற என்னால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்நடமாடும் சேவை யாழ் முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினருடையதும் பங்களிப்போடு இடம்பெறும். வீட்டுத்திட்டம் காணியற்றோரது பிரச்சினைகள் வாழ்வாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நாம் தற்போது தீவிர கவனம் செலுத்துகின்றோம்.
அத்தோடு யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை சீரழிப்பதற்காக எமது மக்களை வைத்து வாக்குவேட்டை அரசியல் செய்வதற்கு ஒருசிலர் கனவு காண்கின்றார்கள் இதில் நான் மிகவுமே நிதானமாக செயற்படுகின்றேன் .இவ்வாறான தவறுகள் இனிவரும் காலங்களில் நடக்காது என தெரிவித்தார்