Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்

01.யாழ்/நாவாந்துறை ரோமன் கத்தோலிக்க பாடசாலை
02.யாழ் ஒஸ்மானியா கல்லூரி 
03. யாழ் கொட்டாடி நமசிவாய பாடசாலை 
04.யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்
05.யாழ் வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் 
06.யாழ் கதீஜா பெண்கள் அரபுக்கல்லூரி

ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று (02) வழங்கி வைக்கப்பட்டது.

மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாமின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்.

இனம், மதம், மொழிகள் கடந்து மக்களுக்கு சேவையாற்றும் கொள்கையினைக் கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான ஒரு உதவித்திட்டமாகவே இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய றிப்கான் பதியுதீன் கூறியதாவது,

“மாணவர்களாகிய நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் பெற்றோர்கள் உங்களை பல கஷ்டங்களுக்கு மத்தியில் படிக்க வைக்கின்றார்கள். ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம். படிக்கும் காலத்தில் உங்கள் பெற்றோர்களை நினைத்து நல்ல முறையில் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கல்வி வளர்ச்சிக்கான முழு உதவியினையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் செய்வதற்கு தயாராக இருக்கின்றார். எனவே உங்கள் முழுக் கவனத்தையும் கல்வியில் செலுத்துங்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் யாழ் மாநகர சபை பிரதி மேயரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post