Breaking
Mon. Dec 23rd, 2024

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள  யாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிர்க்கதியினையும் அவலத்தினையும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ் மண்ணிலே இடம்பெற்ற தேசிய மீலாத் விழா நிகழ்வில் வெளிப்படையாகவும், துணிகரமாகவும் பேசியுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதலை தந்துள்ளதாக, புத்தளம் வாழ் வெளியேற்றப்பட்ட யாழ் – கிளிநொச்சி சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அமைப்பின் தலைவர் மௌலவி அப்துல் மலிக், செயலாளர் ஹசன் பைரூஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களில் குறிப்பாக யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மந்தகதியிலும், புறக்கணிப்புக்களுக்கும், இழுத்தடிப்புக்களுக்கும் மத்தியிலேயே நடைபெற்று வருவதை யாவரும் அறிவர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத்விழாவை அண்மையில் நடாத்தினார்கள். இதனூடாக யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைகளுக்கு அமைவாகவும், பல அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

அமைச்சர் ஹலீமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினார். எனினும், இந்த அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கச்சேரிகளிலும், உள்ளூராட்சி மன்றங்களிலும் பல பணிப்புரைகள் வழங்கப்பட்ட போதும், உரியவர்களினால் இவை கணக்கெடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

யாழ் முஸ்லிம்களின் விடிவை முன்னோக்கி அமைச்சர் ரிஷாட்டினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதனால், அந்த விடயங்களை அவர் மீலாத் விழாவில் வெளிப்படுத்தினார். எனவே, சமூகத்துக்கு ஏற்பட்ட அநீதியை சுட்டிக்காட்டியமையை அரசியலாக யாரும் நோக்கக் கூடாது. யாழ் முஸ்லிம்களின் விமோசனத்துக்காகவும், விடுதலைக்காகவுமே அவர் இந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களின் அவலத்தை தெளிவுபடுத்தினார்.

அரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட ஒரு தேசிய விழாவில், இங்கு வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி, சந்தர்ப்பத்தை மிகச்சரியாக அவர் பயன்படுத்தியிருப்பது பொருத்தமானதே. தேசிய மீலாத் விழாவில் இந்த நாட்டின் ஜனாதிபதி பங்கேற்காமை முஸ்லிம் சமூகத்துக்கு வருத்தம் தருகின்றது.

சிறுபான்மை மக்களின் அர்ப்பணிப்பினால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசின் நாயகர்களாக விளங்கும் உயர்மட்டத் தலைவர்களின் தற்போதோய போக்கு, அவர்கள் இந்தச் சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை படம்போட்டுக் காட்டுகின்றது.

முஸ்லிம்களுக்கு உரித்தான 2௦௦ வீடுகளில் 36 வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மீதிப்பணம் திரும்பி திறைசேரிக்கு சென்றுள்ளமை அகதி முஸ்லிம்களை உளரீதியாகப் பாதிப்படைய வைத்துள்ளது.

மீள்குடியேற்றத்துக்காக வடக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும், சமூக அமைப்புக்களும் நமது உறவுகளும் பாடுபட்டு வருகின்றனர்.

உண்மை, நீதி, இழப்பீடு, மீள்நிகழாமை என்ற ஐ.நாவின் முன்மொழிவுகள் எவற்றிலுமே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை கவனத்திற்கு எடுக்காமை, சர்வதேச சமூகத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மையையே காட்டுகின்றது.

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவி அவர்களை நிம்மதியாக வாழ வைக்க காத்திரமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Post