Breaking
Sun. Dec 22nd, 2024

 

-ஊடகப்பிரிவு-

2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா கடந்த சனிக்கிழமை (23) யாழ் உஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள் என்றும், எல்லோருக்கும் முன்மாதிரியாகவும் அருட்கொடையாகவும் அல்லாஹ் நபிகளாரை அனுப்பி மாக்களாக வாழ்ந்த மக்களை மக்களாக மாற்றிய உத்தம நபியை பின்பற்றும் நாங்கள், பிற இன மக்களுடன் அந்நியோன்னியமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், யுத்தத்துக்கு முன்னர் பாரம்பரியமாக யாழில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று தசாப்தங்களாகியும் இன்னும் அகதி வாழ்வு வாழ்வது வேதனை தருகின்றது. யாழ் மக்கள் மீண்டும் சொந்த மண்ணுக்குத் திரும்பிய நிலையிலும், 450 குடும்பங்கள் இன்னும் இருக்க இடமின்றி கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மீள்குடியேறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். 30 ஆண்டுகளின் பின் வந்தும் இருக்க இடமில்லை. காணியைப் பெற்றுக்கொள்வதில் பல சொல்லனாத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். நானும் இங்கு வந்து அரசாங்க அதிபரின் தலைமையில் பல கூட்டங்களை நடாத்தியும் எதுவும் நடக்கவில்லை.

இந்த தேசிய மீலாத் நிகழ்வை யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தோடு, அவர்களுக்காக 200 வீடுகளை கையளிக்கும் நிகழ்வாக நடாத்த, நான் 160 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருந்தேன். அதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டும் 36 வீடுகளையே கட்ட முடிந்தது. அரச அதிகாரிகள் அவர்களின் காணியைப் பெற்றுக் கொடுப்பதில் காட்டிய அசமந்தப் போக்கே எஞ்சிய வீடுகளைக் கட்ட முடியாமல் போனமைக்கான காரணம் என மனவருத்தத்தோடு இங்கு நினைவு கூர்கின்றேன். மீதி நிதி இவ்ஆண்டின் இறுதியில் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்படுவதையிட்டு நான் வேதனையடைகின்றேன்.

யதார்த்தத்தை நாங்கள் பேசினால் இனவாதிகளாகவும், மதவாதிகளாகவும் காட்ட முற்படுகின்றார்கள். நாம் இன, மத பேதமன்றி மக்கள் பணி செய்து வருகின்றோம்.

இன்ஷா அல்லாஹ் 2018 இல் அவர்களுக்குரிய வீடுகளை அமைக்க நிதியை நான் பெற்றுத் தருகின்றேன் அவர்களுக்குரிய காணிகளை உரிய முறையில் வழங்க அண்ணன் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என அமைச்சர் ரிஷாட் கேட்டுக்கொண்டார்.

முதற்கட்டமாக யாழில் குடியேறியுள்ள மக்களுக்குரிய வீடுகளை அமைக்க உதவி புரியுங்கள். புத்தளத்தில் இருக்கும் ஏனைய மக்களை இரண்டாம் கட்டமாக மீள்குடியமர்த்த உதவி புரியுமாறும் அமைச்சர் வேண்டிக் கொண்டார்.

யாழ் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் இருக்கின்றது. பல தசாப்த காலமாக விவசாயம் கூட செய்யப்படாமல் காணப்படுகின்றது. அதில் அவர்கள் குடியேற வழிவிடுங்கள். இவ்விழா வெற்றிவிழாவாக அமைய வேண்டுமாக இருந்தால், மழையிலும், வெயிலிலும் துன்பப்படுகின்ற ஏழை மக்களின் வீடில்லாப் பிரச்சினை நிறைவுக்கு வரவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை. அதனை தமிழ் தலைமைகள் ஈடுசெய்து தர வேண்டுமென்று அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதன்போது, தேசிய மீலாத் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகள் சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம், இராஜாங்க அமைச்சர் பௌசி, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

 

Related Post