Breaking
Mon. Dec 23rd, 2024

யுத்தத்தால் மோசமாகப் பாதிப்புற்ற வட மாகாணத்தைக் கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இன, மத பேதமின்றி கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

வவுனியாவில் நேற்றுக் காலை (16) இடம்பெற்ற நவீன பேரூந்து நிலைய அங்குரார்ப்பண விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றினார்.

அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பிரதம அதிதியாக பங்கேற்ற இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாட்டுடன் பிரதிப்போக்குவரத்து அமைச்சர் அசோக அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டொக்டர் சிவமோகன், கே கே மஸ்தான், வடமாகாண ஆளுநர் நெஜினோல்ட் குரே, வடமாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான கமலநாதன், லிங்கநாதன், ஜயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார, தேசிய போக்குவரத்து ஆனைக்குழு தலைவர்ம் மற்றும் போக்குவரத்து சபை அதிகாரிகள், ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கூறியதாவது,

யுத்தத்தால் நாம் பட்ட கஷ்டங்கள் அநேகம். பட்டது போதும் இனியும் நாம் கஷ்டங்களைத் தாங்கி வாழ முடியாது. வவுனியா மாவட்டம் யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாவட்டத்தின் கால் நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியவையும் பாதிக்கப்பட்டதனால் பொருளாதார ரீதியில் நாம் மிகவும் நலிவடைந்துள்ளோம்.

வறுமைக்கோட்டின் கீழே வாழும் மக்கள் இந்த மாவட்டத்தில் ஏராளமானோர் உள்ளனர். யுத்தத்தின் பாதிப்புக்களால் விதவைகள், அநாதைகள், மாற்றுத் திறனாளிகளென உருவாகி அவர்களும் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்கின்றனர். சமூகத்தில் இவ்வாறு கஷ்டத்தில் வாழ்பவர்களுக்கு நாம் முன்னுரிமை கொடுத்து உதவ வேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து சேவையை சீர்படுத்தி ஒழுங்கான நிலையிலும் சிறந்த முறையிலும் இந்தச் சேவையை முன்னெடுப்பதற்காகவே இவ்வாறான பாரிய பேரூந்து நிலையமொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. வட மாகாண மக்களை தென்னிலங்கையுடன் மாத்திரமன்றி ஏனைய மாகாணங்களுடனும் இலகுவில் இணைப்பதற்கான ஒரு முயற்சியாக நாங்கள் இதனை கருதுகின்றோம். இதன் மூலம் இந்த மாவட்ட மக்கள் பல்வேறு வழிகளில் மேம்பாடு அடைவதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேரூந்து நிலையத்தை இந்த இடத்தில் அமைப்பதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்களையும், இடர்பாடுகளையும் எண்ணிப்பார்க்கின்றோம். கடந்த அரசில் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களாக நானும் முன்னாள் ஆளுனர் மேஜர் சந்திரசிறியும் இருந்த போது இந்த பஸ் நிலையத்துக்கான இடத்தை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிட்டியது. பல்வேறு தடைகள் இருந்த போதும் அவற்றையெல்லாம் முறியடித்து முன்னெடுத்த காலை பின்வைக்காமல் நாம் எடுத்த காரியத்தை நிறைவேற்றினோம். இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். அதே போன்று, பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்த முன்னாள் அமைச்சர் சி பி ரட்னாயக்காவிற்கும் எனது இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த விழாவில் வவுனியா நகரசபை முன்னாள் தவிசாளரும், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி டி லிங்கநாதன் உரையாற்றிய போது,

இந்த இடத்தில் இந்த பேரூந்து நிலையம் உருவாவதற்கு காரண கர்த்தாவான அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும், வடமாகாணத்தின் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு அரச தனியார் பேரூந்து சாரதிகள் தமது போட்டி மனப்பாங்கையும் அலட்சியப்போக்குகளையும் கைவிட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய அரசின் 195 மில்லியன் செலவில் உள்ளூர், மற்றும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை திறம்பட மேற்கொள்வதற்காகவே இந்தப் பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஏ9 வீதியில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்த நவீனப் பேரூந்து நிலையத்தில் தினமும்100 பஸ் வண்டிகள் வந்து செல்லக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் பயணிகள் தரிப்பதற்கும் உணவருந்துவதற்குமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

7M8A0677 7M8A0612

By

Related Post