மீண்டும் ஒரு யுத்தம் இல்லாத ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக உங்களது எழுத்துக்களை பயன்படுத்துங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலை இலக்கியத்துறையை சேர்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தம் எப்போதும் உண்மையை அழித்துவிடும் என்றும் யுத்தம் எப்போதும் மனிதர்களை அழித்துவிடும் என்றும் இப்பூமியில் எப்போதும் இரத்தம் சிந்தப்படுவதே யுத்தத்தின் அடிப்படை என்றும் யுத்தத்தினால் பௌதீக வளங்கள் மட்டுமன்றி நீதி, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய நல்ல விடயங்களும் அழிந்து போவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்று முந்தினம் (20) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான அரச சாகித்திய விருது விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
முப்பது வருடமாக நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முயற்சித்து வருகின்ற இவ்வேளையில், எல்லா இனங்களுக்கு மத்தியிலும் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காக கலை இலக்கியத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறும் அழைப்புவிடுத்தார்.
மனிதனின் வேதனைகளை சமூகத்திற்கு உரத்துச் சொன்னவர்கள் இலக்கியவாதிகளே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அன்பு, இரக்கம், தாய்மை போன்ற மானிடப் பண்புகளை சமூகத்தில் வளர்த்து மனித சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பியவர்கள் கலை இலக்கியவாதிகளேயாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களுக்கும் நீண்டகால இலக்கியப் பணிகளுக்கான ‘சாகித்திய ரத்ன’ விருதும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
சிறந்த சிங்கள நாவலுக்கான விருது சேன தோரதெனியவினால் எழுதப்பட்ட ‘பண்டார மெரு உன்’ என்ற நாவலுக்கு அதன் வெளியீட்டாளரான தயாவங்ச ஜயக்கொடி அவர்களுக்கும் சிறந்த தமிழ் சிறுகதைக்கான விருது ‘இந்த வனத்துக்குள்’ என்ற சிறுகதைக்காக என்.பீ.அருளானந்தம் அவர்களுக்கும் சிறந்த ஆங்கில நாவலுக்கான விருது ‘நைட் ஒப் ஒலிம்பஸ்’ என்ற நாவலுக்காக ஏ.ஆர்.ஜயதிலக்க அவர்களுக்கும் வழங்கப்பட்டதோடு, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நீண்டகாலமாக இலக்கியப் பணி செய்துவரும் இலக்கியவாதிகளுக்கான சாகித்திய ரத்ன விருதுகள் முறையே, பேராசிரியர் ஜே.பி..திசாநாயக்க, கலாநிதி முல்லைமதி, மற்றும் கெப்டன் எல்மோ ஜயவர்தன ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.