வாழைச்சேனை நிருபர்
யுத்தம் இடம்பெற்றபோது கடலிலும் அமைதி இருக்கவில்லை என முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.சி. பைஸர்கான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட மீனவர்களில் 10 குடும்பங்களுக்கு சுமார் 37,500 ரூபாய் பெறுமதியான 10 தோணிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை மாலை பிரதேச செயலாளர் எம்.எம். நவ்பல் தலைமையில் இடம்பெற்றது.
முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையம் இதற்கு நிதி அனுசரணை வழங்கியிருந்தது.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.சி. பைஸர்கான்,
‘வாழ்வாதார உதவிகளை பயனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த நீங்கள் இப்பொழுது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றீர்கள்.
கடலுக்குச் சென்ற மீனவர்கள் உயிரோடு திரும்பி வர முடியவில்லை. மீன்பிடிப் படகுகளும் மீன்பிடி வலைகளும் திரும்பி வரவில்லை. கடத்தல் கப்பம், கொலை என்று எல்லாவகையான பாதிப்புக்களுக்கும் மீனவர்கள் முகம் கொடுத்தார்கள்.
கடலுக்குள்ளே தமது உறவுகளை மீன்பிடிக்காக அனுப்பி விட்டு கரையிலிருந்து மீனவக் குடும்பங்கள் கண்ணீருடன் காத்திருந்த காலம் ஒன்றிருந்தது. அவ்வாறான சூழ் நிலை இப்போது இல்லை. இப்போது கடலுக்குச் செல்லும் மீனவர்களும், அவர்களது படகுகளுடனும் வலைகளுடனும் பத்திரமாகத் திரும்பி வருகின்றார்கள்.
அதேவேளை கரையிலுள்ள உறவுகளும் ஏக்கப் பெருமூச்சின்றி நிம்மதியாகக் காலம் கழிக்கின்றார்கள்.
எனவே இந்த சூழ் நிலையைப் பயன்படுத்தி அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தருகின்ற வாழ்வாதார உதவிகளைக் கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நீங்கள் முன்னேற வேண்டும்.
நாம் தருகின்ற வாழ்வாதார தொழிலுபகரணங்கள் மூலம் நீங்கள் பெறுகின்ற வருமானத்தின் ஒரு பகுதி உங்களது குழந்தைகளின் கல்விக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும். அதன் மூலம் கல்வி அறிவுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
யுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களின் கல்வி மிகவும் பின்னடைந்திருந்தது. ஆயினும், அதனை மீள அடைந்து கொள்ள வேண்டும்.
அதேவேளை கல்விப் பின்னடைவுக்கு வறுமைதான் காரணம் என்று தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்க முடியாது. எனவே, நாம் கல்வி சமூக பொருளாதார வளர்ச்சியில் சிறுபான்மை சமூக மக்கள் இன்னும் அதிகப்படியான அக்கறை எடுக்க வேண்டும்.’ என்றார்.
இங்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.எம். நவ்பல் உரையாற்றும் போது,
‘பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி கிடைக்கப்பெறாமல் பின் கதவால் வருபவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்ற மோசடியான நிலைமைகளால் தான் சமூகத்தில் ஐக்கியம் சீர்குலைக்கப்படுகிறது.
அதேவேளை முஸ்லிம் எயிட் நிறுவனம் மிகப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து பயனாளிகளுக்குத் தேவையான பொருத்தமான உதவிகளை முழுமையாக வழங்கி வருவதையிட்டு பிரதேச செயலாளர் என்கின்ற வகையில் நானும் பயனாளிகளும் திருப்தியடைய முடியும்.
உரியவர்களுக்கு உரிய உதவி கிடைக்கப்பெற்றால்தான் அதன் பலாபாலன்களை அடைய முடியும்’ என்றார்.
இந் நிகழ்வில் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள அலுவலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். அஸ்மி, சிரேஷ்ட திட்ட அதிகாரி பைஷர் தாஸிம், வாழ்வாதார திட்ட உத்தியோகத்தர் எச்.ஏ. டில்ஷாத், உள்ளிட்டோரும் பயனாளிளான மீனவர்களும் கலந்து கொண்டனர்.