Breaking
Fri. Nov 15th, 2024
பயங்கரவாதிகளைத் தேடியழிக்கும் படையினரின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் நிலையில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்துக்களை வெளியிடுவது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், இது குறித்து பிரதமரிடம் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
தொலைபேசியில் பிரதமரைத் தொடர்பு கொண்ட அமைச்சர் ரிஷாத்பதியுதீன் தெரிவித்ததாவது,
விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்  பெயர்தாங்கிய ஒரு சில இளைஞர்கள் செய்த வேலைக்காக முழு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன்ராமநாயக்க கருத்துக்களை வெளியிடுவது கவலைக்குரியது.
குற்றவாளிகளைக் கண்டறிந்து பூண்டோடு அழித்தொழிக்க முஸ்லிம்கள்  துணிந்து களமிறங்கியுள்ளனர்.
அப்பாவிகளைக் கொல்லும் இவ்வாறான வெறித்தனங்கள் இஸ்லாத்தில் இல்லை.
 முஸ்லிம் உலமாக்கள், பெரியோர் உட்பட முஸ்லிம் சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் இந்தக் கயவர்களின் தாக்குதல்களுக்கு கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி சகலரையும் வேதனை பீடித்துள்ள இச்சூழ் நிலையில் இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளிகளாகக் குற்றஞ்சாட்டுவதாயுள்ளது. இவரின் கருத்துக்கள் சமூகங்களுக்கிடையில் அரசாங்கம் கட்டியெழுப்ப முனையும் நல்லிணக்கம், மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வைத் தூரப்படுத்தும் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.
எனவே குற்றவாளிகளை முழுமையாகக் கண்டுபிடித்து இதன் பின்னணிகளை வெளிப்படுத்தும் வரை இராஜாங்க அமைச்சர் இவ்வாறான வீண் விமர்சனங்களையும் சந்தேகப் பார்வைகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறு எடுத்துரைக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட், நேற்று  மாலை (03) பிரதமரிடம் தெரிவித்தார் .

Related Post