முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் தான் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். 20 ஆயிரம் வீடுகள் 78 பள்ளிவாசல்கள் மற்றும் 60 பாடசாலைகள் அழிக்கப்பட்டன. ஆனால் இன்று சஜித் பிரேமதாச முஸ்லிம்கள் வில்பத்து காட்டில் குடியேற்றப்படுவதாக விமர்சித்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீளக்குடியேற்றி அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஜனாதிபதி வழங்குவார் என்ற திடமான நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் உரையாற்றும் போதே கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வில்பத்து காடு அழிக்கப்படுவதாகவும் முஸ்லிம்கள் குடியேற்றப்படுவதாகவும் இதில் நான் ஈடுபட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச எம்.பி. இன்று சபையில் தெரிவித்தார்.
இக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை உண்மைக்கு புறம்பானமை.
நாடு பிளவுபடுவதை எதிர்த்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக குரல் கொடுத்ததால் தான் விடுதலை புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளிறேற்றப்பட்டார்கள்.
அதுவும் சஜித் பிரேமதாச எம்.பி.யின் தந்தையார் பிரேமதாச ஜனாதிபதி பதவி வகித்த போதே இது நடைபெற்றது.
ஆனால் ஜனாதிபதி பிரேமதாசவோ அவரது அன்றைய அரசாங்கமோ முஸ்லிம்களுக்கு எந்தவொரு உதவியையுமே வழங்கவில்லை. முஸ்லிம்களை மீளக் குடியேற்றவும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜ பக் ஷ நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளார். இந் நிலையில் முஸ்லிம்கள் வடக்கில் தாம் வாழ்ந்த சொந்த இடங்களில் மீளக் குடியேற்ற நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றன. இருபது வருடங்களுக்கு பிரதேசங்களுக்கு செல்லாததால் அப் பிரதேசங்கள் காடு மண்டிக் கிடக்கின்றன.
அவற்றைத் தான் சுத்தம் செய்கிறோம். இதற்கு தான் எதிர்க்கட்சியினரும் இனவாத சக்திகளும் காடுகளை அழிப்பதாக பொய் கூறி பிரச்சினைகளை கிளப்புகின்றனர்.
சிலர் இதற்காக குறிப்பிட்ட சில ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். இதனை கைவிடுங்கள். இந்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவே முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜனாதிபதியின் தலைமையில் இன்று மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வீடுகளை இழந்த 20,000 பேருக்கு மீண்டும் வீடுகளையும் அடிப்படை வசதிகள் பாடசாலைகள் ,பள்ளிவாசல்களை நிர்மாணித்துக் கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுப்பார் என்ற திடமான நம்பிக்கையுள்ளது.
யுத்தத்தின் பின்னர் இன்று வடக்கு கிழக்கு பாரிய அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.(வீரகேசரி 24-05-2014)