அமெரிக்காவினதும் இலங்கை அரசாங்கத்தினதும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தினையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினரும் மஹிந்த அணி யின் பிரதானியுமான தினேஷ் குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தினுள் அமைதியாக சிரித்தவாறே
அமர்ந்து கொண்டார்.
மேற்படி தீர்மானத்தை வாசித்துப் பார்க்கவில்லை என்று கூறும் எனது நெருங்கிய உறுப்பினர் (தினேஷ் குணவர்த்தன) அதனை வாசித்து அறியாது எவ்வாறு தாய்நாட்டைப் பாதுகாப்போம் எனும் பெயரில் நேற்று (நேற்று முன்தினம்) மாநாட்டை நடத்த முடிந்தது என்று கேட்டபோதே உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அமைதியாக அமர்ந்து கொண்டதுடன் சிரித்துக் கொண்டும் இருந்தார்.
பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது உடலாகம, பரணகம மற்றும் ஐ.நா. அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பித்தார்.
இதன் போது எழுந்த உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேற்படி மூன்று அறிக்கைகளைப் பார்க்கிலும் இலங்கை மீதான அமெரிக்காவின் தீர்மானம் அது தொடர்பிலான இலங்கை அரசின் இணக்கம் ஆகியவை தொடர்பான அறிக்கையையே நாம் கோரினோம். அவ்வறிக்கை இதுவரையில் எமக்கு கிடைக்கவில்லை. அதனை வாசித்து அறிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது என்றார்.
ரணில்
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது நெருங்கிய உறுப்பினர் இவ்வறிக்கையை கோரி நிற்கிறார். அதனை வாசித்துப் பார்க்கவில்லை என்றும் கூறுகிறார். அறிக்கை அவருக்கு கிடைத்திருக்கா விட்டால் அல்லது அதனை அவர் வாசித்திருக்காவிட்டால் தாய்நாட்டைப் பாதுகாப்போம் எனும் பெயரில் அவரால் எவ்வாறு நேற்று (நேற்று முன்தினம்) மாநாட்டை நடத்தியிருக்க முடியும் எனக் கேட்டார்.இதற்குப் பதிலளிக்காமலேயே உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன சிரித்தவாறே அமைதியாக அமர்ந்து கொண்டார்.