முஸ்லிம் பெண்களின் மார்க்க ரீதியான ஆடைகளான புர்காஃநிகாப் போன்ற உடைகளை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் உள்நோக்கம் கொண்டு தடைசெய்ய மேற்கொண்ட முயற்சியை தக்க சமயத்தில் தடுத்து நிறுத்திய துணிவுமிக்க கெளரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நன்றி கூறுவதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெருமைகொள்கிறது.
மதத்தைப் பின்பற்றும் உரிமையும்- மதக் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் உரிமையும் எமது யாப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசியல் சட்ட அடிப்படை உரிமையை பாதுகாத்து, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்த மாண்புமிகு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராகிய கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மேலுமொருமுறை எமது முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இஸ்லாமிய பெண்களின் புர்கா ஃநிகாப் ஆடையானது அநேகமாக கறுப்பு நிறத்திலிருந்தாலும் கூட அந்த உடை எந்நிறத்திலும் அணியலாம். உடலை மறைக்கும் ஆடை விடயத்தில் இந்த ஹபாயா ஆடையும் கறுப்பு நிறத்தில் இருந்தாலும் அது கிருஸ்தவ சகோதரிகள் அணியும் வெள்ளை நிற ஆடையையும், பெளத்த பிட்சுனிகள் அணியும் காவி நிற ஆடையை ஒத்ததாகவும் இருக்கின்றது.
மேலைத்தேய கலாச்சாரத் தாக்கத்தினால் இலங்கையிலுள்ள பல்வேறு சமூகங்களும் தங்களது தனித்துவ பாரம்பரிய ஆடைக் கலாச்சாரங்களை இழந்துவரும் நிலையில், அவை குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டுகொள்ளாது இருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். சிங்களப் பெண்மணிகளின் கண்ணியமான தனித்துவமான உடையான சீத்தை துணியும் மேலாடையும் தொடர்ந்தும் கடைபிடிப்பதற்கு அச்சமூகத்தின் பொறுப்புதாரிகள் வேண்டுகோள் விடாமல் இருப்பதும் ஒரு ஆச்சரியமான விடயமாகும்.
S.சுபைர்தீன்
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்