– எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar –
உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பினை நோற்கவுள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தினை தனிமனிதன் சென்ற ரமளானில் விட்ட தவறுகளை நிவர்த்திக்க எதிர் வரும் காலத்தினை பயன் படுத்த வேண்டும் என உறுதி கொண்டு நற்கிரியைகளுடன் தம்மை இணைத்து உளரீதியானதும், பௌதீக ரீதியானதுமான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றான்.
அதேவேளை சமூகத்திலுள்ள அமைப்புகளும், மஸ்ஜிதுகளும் ரமளானுக்கான செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. உறங்கு நிலையில் இருந்த மஸ்ஜித்
நிருவாகங்கள் உச்சாகத்துடன் மஸ்ஜிதுகளை சுத்தப்படுத்துவது முதல் இப்தார் போன்ற பல நிகழ்ச்சிகளுக்காக திட்டமிட்டு இயங்குவதையும், அமைப்புக்கள் ரமளான் சார்ந்த நடவடிக்கைகளுக்காக களம் காண முன் நிற்பதையும் சுட்டிக் காட்ட முடியும்.
ரமளான் மாதத்தினை அடைந்து கொள்ளும் ஒவ்வொருவரும் நோன்பு நோற்று, இறைவனுக்கு விருப்பமான அடியார்களாக தம்மை மாற்றிக்கொள்ள முயற்சிப்பது அவர்கள் மீதுள்ள கடமையாகும். இதனை பின்வரும் அல் குர்ஆன்வசனம் தெளிவுபடுத்துகின்றது.
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும்.”(2:185)
அதேபோன்று ரமளான் மாதத்தின் செயற்பாடுகளுக்கான கூலிகள் இரட்டிப்பாக வழங்கப்படும் என்பதனால் அக்காலத்தில் விசேட கிரியைகளில் அதிகமாக ஈடுபட்டு நன்மைகளைப் பெற பலரும் ஆர்வம் காட்டுவதை அவதானிக்கலாம். எடுத்துக் காட்டாக ஐவேளைத் தொழுகையினை இடைவிடாது கூட்டாக நிறைவேற்றுதல், மற்றும் அல்-குர்ஆனை பாராயணம் செய்து அதன் பொருளறிய முயற்சித்தல், இரவு வணக்கங்களில் ஈடுபட்டு பாவ மன்னிப்புக் கேட்டல், பிரார்த்தனைகளில் முனைப்புக் காட்டல், தானதர்மங்களை மேற்கொள்ளல் போன்ற பல சிறப்புமிக்க அம்சங்களைக் குறிப்பிடலாம்.
பின்வரும் நபிமொழிகள் அதன் சிறப்புக்களை கூறுவதை எடுத்துக் காட்டாக சுட்டிக் காட்ட முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும், இறவனின் திருப்பொருத்தத்தினை நாடியும் நின்று வணங்குகின்றாரோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”. “யார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும், இறவனின் திருப்பொருத்தத்தினை நாடியும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”. “நோன்பும், அல் குர்ஆனும் மறுமை நாளில் அடியார்களுக்கு பரிந்துரைக்கும்” அல்லாஹ் சொன்னதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “நோன்பு எனக்குரியது அதற்குரிய கூலியினை நானே வழங்குவேன்”போன்ற நபிமொழிகள் சிறந்த உதாரணங்களாகும்.
மேலும் நோன்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கத்தினை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
“உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதியாக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) தூய்மையுடையோர் ஆகலாம்.”(2:183)
இறைவனைப் பற்றிய பயம்,அவன் எம்மை அவதானித்துக் கொண்டிருக்கின்றான்,செயற்பாடுகள் அவனையன்றி வேறு யாருக்காகவும் மேற்கொள்ள முடியாது போன்ற உயர் இட்சியத்தினை கொண்ட மனிதர்களையும், சமூகத்தினையும் கட்டி எழுப்புவதே நோன்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் உயர் நோக்கமாகும்.
இலட்சிய மனிதன் எப்போதும் ஒரு இலக்கினை நோக்கிப் பயணிப்பதையும், அவ்விலக்கினை அடைந்து கொள்வதற்காக ஏற்படும் சிரமங்களைத் தாங்கி,தம்மை உறுதிப் படுத்திய நிலையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதை காண்கின்றோம்.
இஸ்லாம் தெளிவான இலக்கினைக் கொண்டுள்ளது. அது பல செயற்பாடுகள் மூலமாக அவ்விலக்கினை அடைந்து கொள்ள மனிதற்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றது. அதில் ரமளான் மாத நோன்பு சிறந்த பயிற்சிக்களமாகும்.
இருப்பினும் எமது சமூகத்தில் ரமளான் கால எமது செயற்பாடுகள் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன? இஸ்லாம் எதிர்பார்க்கும் இலட்சிய சமூக்திற்கான அத்திவாரங்களாக அவை அமைகின்றனவா? சமூக ஒற்றுமையினை பிரதி பலித்து, சான்று பகரக்கூடியதாக உள்ளனவா? போன்ற கேள்விகளுக்கான தெளிவுகளை எமது செயற்பாடுகளை மீட்டிப்பார்ப்பதன் மூலம் பெற முயற்சிக்கலாம்.
ரமளான் ஆரம்பம் முதல் பெருநாளுக்கான பிறை பார்ப்பது வரை அம்மாதத்தின் பெயரால் பல நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.அவை சில போது சமூகத்தில் ஆரோககியமற்ற நிலைமையினை ஏற்படுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள், பிறையை பார்த்து நோன்பை முடித்துக் கொள்ளுங்கள் (ஆதாரம்: புகாரி)
நோன்பு நோற்பதற்கும்,அதனை முடிப்பதற்கும் பிறையை பார்த்தல் அவசியமாகும்.
இந்த வகையில் எமது நாட்டில் பிறை பார்க்கும் விடயத்தில் மூன்று கருத்துக்கள் நிலவுகின்றன.ஒன்று நாட்டிலுள்ள மக்கள் பிறையை கண்டு சாட்சிகள் மூலம் உறுதிப் படுத்தும் முறை, இரண்டு உலகின் எந்தவொரு பகுதியிலாவது பிறை கண்டு அறிவிக்கப்பட்டால் அதை பின்பற்றிக் கொள்ளல்,மூன்று பிறையை கணிப்பிட்டு விடயங்களை கையாளுதல்.
இந்த வகையில் ஒவ்வொரு கருத்துடையோரும் “ஹதீஸ்”களை விளங்கி தமக்குச் சார்பான ஆதரமாக வலுச்சேர்த்துக் கொள்வர்.
எமது நாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா தலைமையில் பிறை பார்த்து விடயங்களை கையாளும் முறையே பின்பற்றப் படுகின்றது. அதனையே மக்களும் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச ரீதியாக பார்கப்படும் பிறையே சரியானது என்ற கருத்தினை சிலர் திணிக்கின்றனர்.இதனால் குறிப்பிட்ட சில கிராமங்களில் மக்கள் பல அசௌகரியங்களுகுள்ளாவதையும், பல அணிகளாகப் பிரிந்துள்ளதையும்,நாட்டில் முஸ்லிம்களின் சமூக கட்டமைப்பினை சீர் குலைக்கும் நிலைமை வளர்வதையும், எல்லோரும் சேர்ந்து எடுக்கவேண்டிய பெருநாள் கருத்து வேறுபாட்டால் சிறுமைப்பட்டுப் போய் உள்ளதையும் கவனத்திற் கொள்ளலாம்.
சர்வதேச பிறையை ஆதரித்த இமாம் அல்பானி (றஹ்) அவர்கள் கூறிய பிவன்ரும் வழிகாட்டல் அக்கருத்தினைக் கொண்டோர்களுக்கு படிப்பினையகாக் கொள்ள முடியும். “சர்வதேச பிறை விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் உடன் பாட்டிற்கு வரும் வரை ஒவ்வொரு நாட்டு மக்களும் தத்தமது நாட்டுடன் நோன்பு பிடிக்க வேண்டும். சிலர் தமது நாட்டுடனும் மற்றும் சிலர் வேறு நாட்டுடனும் நோற்று பிளபட்டுக் கொள்ளக் கூடாது” (தமாமுல் மின்னா)
ரமளானில் விசேட இரவுத் தொழுகையின் “றகஆத்தில்” ஒற்றுமைப்பட்ட நிலையினை காண முடியவில்லை.நபியவர்களின் ரமளான் மற்றும் ஏனைய காலங்களினதும் இரவு வணக்கம் பற்றி மிகத் தெளிவாக புகாரி கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்ட “ஹதீஸ்”கள் இருக்கத்தக்க நிலையில் அதனை கவனத்திற் கொள்ளாமல் கருத்தக்களால் மோதிக் கொள்வதை சரிகாண முடியாமலுள்ளது.
“இப்தார்” வைபவங்களை சிலர் சமூகத்திலுள்ள மேட்டுக் குடியினரை குறிப்பாகக் கொண்டு நடாத்துவதனால் அடிமட்டத்திலுள்ளவர்களை கவனிக்க முடியாத நிலைமையினையும், மேலும் அதில் சில வீண் விரயங்கள் இடம் பெறுவதையும் காண்கிறோம். இது தவிர்க்கப்படல் வேண்டும். சமூகத்தில் விசேடமாக நடாத்தப்படும் “இப்தார் வைபவங்களில் அனைத்துத் தரப்பினரையும் கலந்தகொள்ளச் செய்து ஏற்ற தாழ்வு மனப்பாங்கினை நீக்க சம்பந்தப்பட்டவர்கள் முயற்சித்தல் அவசியம்.
சில கிராமங்களில் அரசியல்வாதிகள் “இப்தார்” வைபவங்களை ஏற்பாடு செய்யும் போது எதிர் தரப்பினர் அதனை தடுத்து நிறுத்தி நோன்பின் பெயரில் அரசியலை அரங்கேற்றும் அசிங்கமான செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.
ஒலி பெருக்கியினைப் பயன் படுத்தி பள்ளிவாசல்களில் இடம் பெறுகின்ற மார்க்க உபதேசங்களையும் ,தொழுகைகளையும் பள்ளி சுற்று வட்டத்தோடு அமைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமற்ற சூழலிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.
ரமளான் இரவு நேரங்களில் பாதைகளில் கூட்டம் கூட்டமாக நிற்றல், மற்றும் கிரிகட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடல், இரவு நேரத் தொழுகையினை முடித்து விட்டு கிராமங்களில் வலம் வரல் போன்ற செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்திருத்தல் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஆரோக்கியமான சூழலைத் தோற்றுவிக்கும்.
மஸ்ஜிதுகளில் “இஃதிகாப்” இருத்தல் நிறைந்த நன்மைகளைத் தரும். நபி (ஸல்) அவர்கள் ரமளான் காலங்களில் மஸ்ஜிதுகளில் இருந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள்.இருப்பினும் எமது மஸ்ஜிதுகளில் சிலர் ரமளான் இரவு நேரங்களை வணக்கங்களால் அலங்கரிப்பதற்குப் பதிலாக கல்யாண வீடு போன்று பயன் படுத்துகின்றனர்.எதற்காக அங்கு தங்கி இருக்கின்றோம் என்பதை மறந்து செயற் படுகின்றனர். மஸ்ஜித்களின் கண்ணியத்தினை மார்க்க அறஞர்கள் விளக்கி ரமளான் கால இரவினை சிறப்பித்தவர்கள் பட்டியலில் எல்லோரையும் சேர்க்க துணை நிற்றல் அவசியம்.
இலங்கை இம்முறை இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்ட்ட நிலையில் ரமளான் மாதத்தினை சந்திக்கின்றது. முஸ்லிம்கள் உட்பட நாட்டிலுள்ள சகல சமூகத்தவர்களும் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். நோன்பு நோற்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சகல ஆயத்தங்களையும் இழந்த நிலையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எம் சகோதரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சமூக ஒற்றுமையினை கவனத்திற்கொண்டு ரமளான் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இச்சந்தர்பத்தினை பயன் படுத்தி உதவிக் கரங்களை நீட்டுவதனால் எமது முன்மாதரிகள் மூலம் சான்று பகிரக் கூடிய சமூகமாகவும், ஒற்றுமைக்கான பாலமாகவும் ரமளான் நோன்பினை மாற்றிக் கொள்ளலாம்.