மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் வாழும் ஹிந்துக்கள், தங்களுடைய அண்டை வீடுகளில் வாழும் முஸ்லிம்களுடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, லக்னெüவில் புந்தேலி சமாஜ் என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாரா பட்கர் கூறியதாவது:
“மஹோபா நகரில் உள்ள உதால் செக் பகுதியில், வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம் சமூகத்தினருடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளோம்.
60 நபர்கள் அடங்கிய ஒரு குழுவாக சேரி, இஃப்தார் (விருந்து) நிகழ்ச்சிகளில் பங்குகொள்வோம். இந்தக் குழுவில், 25 பேர் ஹிந்துக்கள் ஆவர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம், மத நல்லிணக்கம் வலியுறுத்தப்படும். அதேசமயம், மஹோபா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற எங்களுடைய பிரசாரமும் வலுப்பெறும்.
எங்களுடைய ஒற்றுமையை அரசு அங்கீகரிக்கும் என்று நம்புகிறோம். இதன்மூலம், எய்ம்ஸ் மருத்துவமனையை இந்த மாவட்டத்தில் அமைப்பதற்கு சாதகமான முடிவை அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
சர்வதேச யோகா தினத்தில் முஸ்லிம்கள் பங்கெடுப்பதா வேண்டாமா? என்னும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ரமலான் நோன்பு மூலம் ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையை அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் முன்னிலையில் எடுத்துக்காட்ட உள்ளோம்.
மஹோபா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியுள்ளோம்.
இந்த பிரசாரத்தின் ஒரு அங்கமாக, முஸ்லிம் இளைஞர்கள் சமஸ்கிருதத்திலும், ஹிந்துக்கள் உருதுவிலும் கடிதங்களை எழுதி அனுப்பினர். மஹோபா நகரின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகள், மேல் சிகிச்சைக்காக கான்பூர், லக்னெ, ஆக்ரா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம், உத்தரப் பிரதேசத்தின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்” – என்றார் அவர்.