நிதியமைச்சர் ரவி கருணாநாயகவின் பெயர் ரவீந்திர சந்திரேஸ் கணேசன் என பந்துல குணவர்த்தன எம்.பி.யி.னால் கூறப்பட்ட விடயம் நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பந்துல குணவர்த்தன பாராளுமன்றத்தில் அறிவித்தது போன்று தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஆளும் கட்சியினர் நேற்று சபையில் கோஷமிட்டு அழுத்தங்களைப் பிரயோகித்தனர்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் எழுந்து பந்துல எம்.பி. சபையை விட்டு வெளியேற வேண்டும் என்று இடைவிடாது கோஷம் எழுப்பியதால் சபை நடவடிக்கை ஸ்தம்பிதமாகின. சபையில் குழப்பநிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீண்ட நேரமாக பிரயத்தனம் மேற்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய இயலாத கட்டத்தில் சபை நடவடிக்கைகளை 2.35 மணியளவில் ஒத்திவைத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நிலையியற் கட்டளை 19- 1 இன் கீழ் விளக்கம் ஒன்றை முன்வைப்பதாகக் கூறினார்.
அவர் கூறுகையில்,
நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) நான் சபையில் இல்லாதபோது சுதந்திரக்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தனவின் உரையில் எனது பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் மாலை வேளையில் அவர் ஹன்சாட் அறிக்கையின் விடயங்களை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதாகவும், ரவி கருணாநாயக்கவின் பெயரை தவறாக கூறிவிட்டதாகவும் கூறி தனது கவலையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். அத்துடன் அவர் கவலை வெளியிட்டதை நான் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். அவர் கவலை வெளியிட்டமையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
பந்துல குணவர்தன எம்.பி. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். நேற்று கூறிய விடயமும் நான் சபையில் இல்லாத போதே இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக எனது பெயருக்கு களங்கம் விளைவித்து வந்தமையை நான் மன்னித்திருக்கிறேன்.
நான் கத்தோலிக்கன். எனது மனைவி முஸ்லிம் மலே ஆவார், எனது வியாபார நிறுவனங்களில் தமிழ் உத்தியோகத்தர்கள் உள்ளனர். நான் நியாயமான வியாபார நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறேன்.
பாராளுமன்ற அமர்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட தருணத்தில் பந்துல குணவர்த்தன எனது பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளார். அத்துடன் அவர் தனது பிழைதிருத்தத்தை முன்வைத்த போது நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றிருக்கவில்லை. இப்படி இவர் நடந்து கொள்வதற்கு இடமளிக்க முடியாது. எனது பொறுமைக்கும் எல்லை ஒன்று உண்டு. ஹன்சாட்டில் உள்ளதாக இவரால் கூறப்பட்ட பெயர் அவ்வாறு இல்லை என்று நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக இவர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
எனவே அவர் கூறியவாறு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
சர்ச்சை
இதற்குப் பதிலளிக்கும் வகையில் உறுப்பினர் பந்துல குணவர்த்தன எழுந்தபோது ஆளும் கட்சியினர் பலத்த கோஷங்களை எழுப்பினர். பாராளுமன்றத்தை விட்டு வெளியேறுமாறு தொடர்ச்சியாக கூச்சலிட்டனர். ஆளும் கட்சியின் எம்.பி.கள், அமைச்சர்கள் சபையில் எழுந்து நின்று பந்துல எம்.பி.யைப் பார்த்து சபையை விட்டு வெளியேறுமாறு கூறினர். இதன்போது பந்துல எம்.பி தனது கருத்துக்களை முன்வைப்பதற்கு சிறிதும் இடமளிக்காத வகையில் கூச்சல் ஏற்பட்டிருந்தது.
சபாநாயகர்
சபையில் எழுந்திருந்த கூச்சல் குழப்ப நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சபாநாயகர் கருஜயசூரிய பெரிதும் பிரயத்தனம் மேற்கொண்டபோதும் அது கைகூடவில்லை.
கிரியெல்ல
இதன்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல, பந்துல குணவர்தன எம்.பி. மேற்படி விடயத்தைக் கூறியபோது அவ்வாறு கூறவேண்டாம் என்று வலியுறுத்தினேன். எனினும் அவர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை தவறாகவே தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருந்தார். எனினும் அவர் கூறிய விடயம் பொய்ப்பித்து விட்டதால் அவர் சவால் விடுத்ததன் பேரில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் சிறிது நேரத்திற்கேனும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றார், அத்துடன் பந்துல எம்.பி.யின் கூற்று பொய்யாகிவிட்டதால் அவர் தனது பதவியை இழந்தவராகவே இந்த சபையில் உள்ளார். ஆகவே அவர் சபையை விட்டு வெளியேற வேண்டும் என்று சபாநாயகரிடம் முறையிட்டார்.
ஒத்திவைப்பு
இதற்கு மத்தியில் கூச்சலும் குழப்பநிலையும் அதிகரித்திருந்தமையால் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
ஜே.வி.பி., த.தே.கூ. எம்.பிக்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் சிரித்தவாறே அமர்ந்திருந்தனர்.
ஒத்திவைக்கப்பட்ட சபை மீண்டும் 2.40 க்கு கூடியது.
ரவி
மீண்டும் எழுந்த அமைச்சர் ரவி கருணாநாயக்க நேரடி ஒளிபரப்பு நேரத்தில் பந்துல குணவர்தனவினால் கூறப்பட்ட விடயம் நாட்டு மக்களை சென்றடைந்துள்ளது. இதுபோன்ற பல தவறான கருத்துக்களையும் இவரால் முன்வைக்க முடியும்.
எனவே தனது தவறினை இப்போது நேரடி ஒளிபரப்பு நேரத்தில் நாட்டு மக்கள் அறிவதற்கு தெளிவுபடுத்த வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். அத்துடன் இவ்வாறு இனிவரும் காலங்களில் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று சபாநாயகர் கூறியதையடுத்து சபை அமைதி நிலைக்கு வந்தது.