அஷ்ரப் ஏ சமத்
இலங்கையில் இருநூற்று ஐம்பது பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஐ நா சபைக்கு முறைப்பாடு அனுப்பிய நீதி அமைச்சர் ஹக்கீம் பள்ளிகள் உடைக்கப்பட்டதற்காக இலங்கையில் என்ன நீதியை நிலைநாட்டியுள்ளார் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார்.
கண்டி மஹியாவ பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல,
ராஜபக்ஷ குடும்பத்துக்கு அதரவு வழங்குவதை ஞாயம் கற்பிக்க கடந்த வாரம் அலறி மாளிகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட நாடகத்தின் ஒரு அங்கமாக நேற்று முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றியது. ஐ நா சபைக்கு இருநூற்று ஐம்பது பள்ளிவாயல்கள் உடைக்கப்படுள்ளதாக முறைபாடு அனுப்பிய நீதி அமைச்சர் ஹக்கீம் அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லி ஜனாதிபதியிடம் தனது தேர்தல் கோரிக்கையில் கேட்டுள்ளாரா? என அவர் கேள்வி எழுப்பினார்.
அண்மையில் இடம்பெற்ற அலுத்கம பேருவளை கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அரசாங்கம் நீதியை பெற்றுகொடுக்காவிட்டால் தான் தனிப்பட்ட ரீதியில் வழக்கு பதிவு செய்யதாவது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியையும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக்கொடுப்பதாக நீதி அமைச்சர் ஹக்கீம் வாக்குறுதி அளித்திருந்தார் அப்போது தான் அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
தனது கவுரவத்தை பாதுகாத்துக்கொள்ள இதுவரை அளுத்கம பேருவளை கலவரம் தொடர்பாக ஹக்கீம் யாருக்கெதிராகவும் வழக்கு பதிந்ததாக நான் அறியவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் தனது கவுரவத்தை காத்துக்கொள்ளவும் கவுரவ நீதியமைச்சருக்கு இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வளவு காலம் பெயருக்கு நீதி அமைச்சராக இருந்த ஹக்கீம் தேர்தல் காலத்திலாவது ஜனாதிபதியுடன் பேசி உடைக்கப்பட்ட பள்ளிவாயலகளுக்கும் அளுத்கம பேருவளை கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க முடியுமா? முடிந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் செய்து காட்டட்டும், அதனை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் செய்தால் முஸ்லிங்களுக்காக தான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என தான் பகிரங்க சவால் விடுப்பதாகவும் கண்டி மஹியாவ பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார்.
வரும் ஒன்பதாம் திகதியின் பின்னர் முஸ்லிம்கள் இழந்த கவுரவத்தை தாங்கள் முன்னின்று பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சராக இருந்து கொண்டு ஆசனத்தை சூடாக்கிகொண்டிருக்கும் அமைச்சர் ஹக்கீமிடம் தான் சுட்டிக்காட்டவிரும்புவதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.