Breaking
Thu. Nov 14th, 2024
ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.  அதன் விமானிகள் 2 பேர், பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரை சிரியா படைகள் சுட்டுக்கொன்றன. மற்றொருவரை சிரியா படைகள்  பிடித்துச்சென்றன. ஆனால் அவரை ரஷியா மீட்டு விட்டது. இதன்காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது.
ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறுகிறது. ரஷியா, விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று துருக்கியின் கூற்றை மறுத்தது.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானி முராக்தின் பேசுகையில், துருக்கி வான் எல்லையை விமானம் மீறுவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது. விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன்னதாக எந்த ஒரு எச்சரிக்கையும் துருக்கியால் விடப்படவில்லை என்று கூறினார். இவ்விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதியாக இருக்கவேண்டும் என்று ஐ.நா. சபை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துஉள்ளன.
இந்நிலையில் இது தொடர்பான ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது. ‘தெற்கு நோக்கி பறந்து வருதை உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று ஆங்கிலத்தில் கூறுவது அதில் இடம்பெற்றிருக்கிறது. சிரியா எல்லையில் ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, போர் விமானங்கள், ஏவுகணை தாங்கிய கப்பல்கள் என தனது ராணுவ பலத்தை சிரியாவை சுற்றிலும் ரஷியா அதிகரித்து உள்ளது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.
துருக்கியின்  நடவடிக்கை, ரஷியாவுக்கு ஆத்திரத்தை அளித்து உள்ளது. துருக்கி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்தார். இந்த நிலையில், துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு எடுத்துள்ளது.
இதுபற்றி மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர், மாஸ்கோவில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மெத்வடேவ், ‘இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பதிலடி தருகிற விதத்தில் பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராயுமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறினார்.
இதற்கிடையே விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில் ரஷியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என துருக்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
“இது தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்தது சரிதான்” என்று துருக்கி நாட்டின் வெளியுறவு மந்திரி மெவ்லுட் கவுசோக்லு கூறிஉள்ளார்.

By

Related Post