ரஷ்யாவுடன் இரண்டாவது பனிப்போர் ஏற்படுவதை விரும்பவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி ஆஷ் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.
நேற்று கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்ட்டர், உக்ரைனை ஆக்ரமித்தது, சிரியாவிற்கு படைகளை அனுப்பியது என ரஷ்யா உலகை நாசமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “ரஷ்யாவுடன் பனிப்போரையோ அல்லது நேரடி போரையோ அமெரிக்கா விரும்பவில்லை. நாங்கள் ரஷ்யாவை எதிரியாக மாற்ற விரும்பவில்லை. அதேசமயம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்துக்கொள்ளமாட்டோம்.
தரை, கடல் மற்றும் இணையவெளியில் பல சர்ச்சைகுரிய, சவாலான செயல்பாடுகளை ரஷ்யா மேற்கொண்டுள்ளது” என்று கார்ட்டர் தெரிவித்தார். மேலும் தென்சீன கடல் பகுதியில் சீனாவின் செயல்பாடுகள் பற்றி அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கவலை அடைந்துள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.