Breaking
Tue. Dec 24th, 2024

ரஷ்யாவின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் மில்லியன் கணக்கான அரிய ஆவணங்கள் சேதமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ரஷ்யாவில் சமூக விஞ்ஞானங்களுக்கான அறிவியல் தகவல் நிறுவனத்திற்கு (ஐஎன்ஐஓஎன்) சொந்தமான இந்நூலகம் 1918 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 21500 சதுர அடி அளவிற்கு பரந்து விரிந்து காணப்படும் இந்த நூலகத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆவணங்கள் உட்பட 10 மில்லியன் ஆவணங்கள் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த நூலகத்தின் இரண்டாவது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் மள மளவென பரவிய தீயால் பல அரிய ஆவணங்கள் தீக்கிரையானது. உடனடியாக நூலகத்திற்கு வந்த சுமார் 200 தீயணைப்பு படை வீரர்கள் நேற்று மாலை வரை போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் 1 மில்லியன் ஆவணங்கள் சேதமடைந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

ரஷ்ய அறிவியல் அகாடமியின் தலைவரான விளாடிமிர் போர்டோவ் இது குறித்து அந்நாட்டு பத்திரிக்கை ஏஜென்சி ஒன்றிற்கு அளித்த செய்தியில், இது அறிவியல் உலகுக்கு ஒரு மாபெரும் இழப்பு. அறிவியல் உலகின் முக்கிய தொகுப்புகள் கொண்ட இந்த நூலகம் கிட்டத்தட்ட அமெரிக்கா காங்கிரஸ் நூலகத்திற்குச் சமமானது என்று தெரிவித்தார்.

நூலக அதிகாரிகள் தொடக்கத்தில் ஆவணங்களுக்கு ஆபத்து இல்லை என்றே கூறினர். ஆனால் 1000 சதுர அடி அளவிற்கு பரவிய தீயாலும், அதை அணைப்பதற்காக ஒரு நாள் முழுவதும் தீயணைப்பு வீரர்களால் செலுத்தப்பட்ட தண்ணீராலும் ஆவணங்களூக்கு ஏற்பட்ட பாதிப்பு நிச்சயம் குறைவானதாக இருக்க முடியாது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

Related Post