நினைவாற்றலும் கற்றுக்கொள்ளும் திறமையும் கொண்ட ரோபோவொன்றை செயலிழக்கச் செய்வது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகள் சிந்திக்கின்றனராம்.
இந்த ரோபோ ஆய்வு கூடத்திலிருந்து இரு தடவைகள் தப்பிச் சென்றமையே இதற்கான காரணம்.
த புரோமோபோட் ஐ.ஆர்.77 (The Promobot IR77) என பெயரிடப்பட்ட இந்த ரோபோ அதிக செயற்கை மதிநுட்பம் (ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ட்) கொண்டது.
தனது அனுபவம் மற்றும் சுற்றாடல் நிலைமைகளிலிருந்து கற்றுக்கொள்ளும் திறமையையும் அதிக நினைவாற்றலையும் கொண்ட ரோபோ இது.
இந்த ரோபோ விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக புத்திசாலித்தனமாக அமைந்து விட்டது போலும்.
அண்மையில் ஆய்வு கூடமொன்றிலிருந்து இந்த ரோபோ தப்பிச் சென்றது. அதன்பின் அந்த ரோபோவை தேடிக்கண்டுபிடித்த ரோபோ தயாரிப்பாளர்கள், அதன் கணினி மென்பொருளில் மாற்றங்களைச் செய்தனர்.
ஆனால், அண்மையில் இரண்டாவது தடவையாகவும் இந்த புரோமோபோட் ஐ.ஆர்.77 ரோபோ தப்பிச் சென்றமை இதன் தயாரிப்பாளர்களை திடுக்கிடச் செய்துள்ளது.
ரஷ்யாவின் பேர்ம் கிராய் பிராந்தியத்திலுள்ள பேர்ம் நகர வீதிகளில் சென்று கொண்டிருந்த ரோபோ அதன் பெற்றரி வலு தீர்ந்த பின்னரே ஓய்ந்தது.
சுமார் 45 நிமிட நேரத்தின் பின்னரே இந்த ரோபோ காணாமல் போன விடயம் அதன் கட்டுப்பாட்டாளர்களுக்குத் தெரிய வந்ததாம்.
இதனால், இந்த ரோபோவை செயலிழக்கச் செய்வது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த ரோபோவின் அபிமானிகள் அதை செயலிழக்கச் செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
“இது உயிருள்ள ஒரு நபரை கொல்வதற்கு சமமானது எனக் கூறும் புரோமோபோட் ரசிகர்கள், இந்த ரோபோ சுதந்திரத்தை நாடுகிறது எனக் கூறுகின்றனர்.
எனினும், இந்த ரோபோ தொடரில் தயாரிக்கப்பட்ட ஏனைய ரோபோக்கள் தப்பிச் செல்ல முற்படவில்லை எனவும் அவை சிறப்பாக இயங்குவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
புரோமோபோட் ரோபோவை தயாரித்த ஆய்வுகூடத்தின் இணை ஸ்தாபகரான ஒலேக் கிவோகுரட்சேவ் என்பவர் கூறுகையில், “நாம் தற்போது 3 ஆம் தலைமுறை ரோபோக்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
எதிர்வரும் இலையுதிர் காலத்தில் இந்த ரோபோக்கள் வெளியிடப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.