நகர்வுகள், திருப்பங்கள், திடீர் செய்திகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே போரொன்று வெடித்திருப்பதையே நிரூபணம் செய்கின்றன. அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகராக (வேட்பாளர்) வெளிப் பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு பலத்த சவாலாகியுள்ளது.
இதுவரை ராஜபக்ச அரசிலிருந்து அமைச்சர்கள் மூவர், பிரதியமைச்சர் ஒருவர், பாராளுமன்ற உறுப் பினர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். இன்னும் 20 பேர் அளவில் விலகிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுக்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாள் டிசம்பர் 8 என்றும், வாக்கெடுப்பு 8 ஜனவரி 2015-ல் என்றும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆசிர்வாதத்துடன் அரசின் எதிரணி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராகக் களமிறங்குகிறார். இதனை அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, 21 நவம்பர் அன்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.