ராஜபக்ஷவினர் தேர்தலுக்கு தயாராகவில்லை எனவும் வன்முறைக்கே தயாராகி வருவதாகவும் ஜே.வி.பியும் அதற்கு தயார் எனவும் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
படால்கும்புர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, பிரசார மேடைகளை உடைத்து, அலுவலகங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து, அச்சுறுத்தல் விடுத்து, ராஜபக்ஷவினர் தேர்தலுக்கு தயாராகவில்லை. அவர்கள் வன்முறைக்கு தயாராகி வருகின்றனர்.
அப்படியான வன்முறைகளுக்கு அவர்கள் தயார் என்றால், நாமும் தயார். நாங்கள் ஜே.வி.பியினர் என்பதை ராஜபக்ஷவினர் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
ராஜபக்ஷவினர் தமது அதிகாரத்தை தக்கவைக்க எந்த வன்முறையில் ஈடுபடவும் தயாராக உள்ளனர்.
இந்த வன்முறைகளுக்கு மத்தியில் தேர்தல் ஆணையாளர் வானொலிகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கு எவற்றையோ கூறி, தனது கடமையை ஒதுக்கி வைத்து விட்டு, செவ்விகளை மாத்திரம் வழங்கி வருகிறார்.
தேர்தல் வன்முறைகள் பற்றி தேர்தல் ஆணையாளரிடம் கூறினால், நீதிமன்றத்திற்கு செல்லுமாறு கூறுகிறார். அப்படி கூறுவதற்கு தேர்தல் ஆணையாளர் ஒருவர் தேவையில்லை.
அதிகாரத்தை கைவிட்டுச் செல்வது ராஜபக்ஷவினருக்கு பிரச்சினையானது. அதிகாரத்தை கைவிட்டு அவர்களால் வீட்டுக்கு சென்று வெறுமனே இருக்க முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.