இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசாங்கத்துக்கு இல்லை என்று இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் குறித்த ஏழு பேரையும் தமிழக அரசாங்கம் விடுவிக்க உத்தரவிட்டது.
எனினும் இதற்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் நிறுவப்பட்ட அரசியல் சாசன நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீ.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வு பிரிவினால் விசாரணை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் அதிகாரம், மாநில அரசாங்கத்துக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தங்களின் வாதத்தை தமிழ் நாட்டு அரசாங்கம் தொடர்ந்தும் தற்காத்து வருகிறது.
14 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனையை அனுபவித்த கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கு இருக்கிறது.
நீதிமன்றத்துக்கு மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது என்று தமிழக அரசாங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை விசாரணை செய்யப்படவுள்ளது.