சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ராம்குமார் பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமார் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வந்த போது, இருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தனர்.
பிரேத பரிசோதனையின் போது பரமசிவம் சார்பில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் இடம் பெறவேண்டும் என்று நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் முடிவு செய்தார்.
ஆனால், அரசு டாக்டர் ஒருவரை இடம் பெறச் செய்யலாம் என்று நீதிபதி வைத்தியநாதனும் முடிவு செய்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் இறுதி முடிவினை எடுக்க 3-வது நீதிபதி விசாரணைக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக என். கிருபாகரன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் 3வது நீதிபதியாக கிருபாகரன் விசாரணை நடத்திய போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
எனினும் ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் தனியார் டாக்டரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்ததுடன் வரும் 27ம் திகதிக்கு முன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராம்குமாரின் தந்தை தெரிவித்ததால், அவரது கோரிக்கையை ஏற்று ராம்குமாரின் உடலை 30ம் தேதி வரை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்றும், அதுவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை ராம்குமாரின் தந்தை மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.
– Nakkheeran