Breaking
Thu. Nov 14th, 2024

ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதை நம்ப முடியாது” என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. அவரிடம் சில கேள்விகளை எழுப்பினோம்.

ராம்குமார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்வதற்கு எந்தளவுக்கு சாத்தியம் உள்ளது?

நான் நீதிபதியாக இருந்தபோது, தமிழக சிறைகளில் கைதிகளின் நிலைமைகளைப் பரிசீலித்து சிறை சீர்திருத்தங்களுக்கு உத்தரவிட்டேன். கைதிகளின் அறைகளில் மின்விசிறி வைக்கச் சொன்னேன். அதற்கு, சிறை நிர்வாகமும் அரசும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

மின்கம்பிகள் கைதிகளின் அறைக்குள் கொண்டு வரப்பட்டால் தவறுகள் நடக்கும் என வாதிட்டனர். மின்கம்பிகளை சுவற்றுக்குள் பதித்து, கூரையின் உச்சியில் மின் இணைப்பு கொடுத்தால் விபத்துகளைத் தடுக்கலாம் என உத்தரவிட்ட பிறகுதான் சிறைகளில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டன.

இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்பட்ட கைதியை தூக்கிலிடுவதன் மூலமே அவரது உயிர் பறிக்கப்படும். அமெரிக்காவில் மட்டும்தான் மின்சார நாற்காலியில் பிணைத்து உயிரைப் பறிக்கும் தண்டனை நடைமுறையில் உண்டு. ஒருவேளை புழல் சிறை சம்பவம் அப்படிப்பட்ட தண்டனைக்கு ஒத்திகையா என்று தெரியவில்லை.

சிறையின் அனைத்துப் பகுதிகளிலும் திறன்வாய்ந்த சி.சி.டி.வி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ராம்குமாரின் தற்கொலை(?!) அந்த சி.சி.டி.வி பதிவுகளில் இருக்க வாய்ப்புள்ளதா?

சிறைக்கைதிகளின் அறைகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆனால், சிறைக்குள்ளிருக்கும் பொது வெளிகளில் பொருத்தவேண்டும். சமையற்கூடத்துக்கு அருகில் இருக்கும் கமரா செயல்படாத நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுவது இன்னும் ஐயங்களை அதிகப்படுத்துகிறது.

ராம்குமார் இறப்பின் காரணம் மின்சாரம் தாக்கியதால்தான் என்றாலும் உடலில் காயங்கள் உள்ளதாக அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக் குறிப்பு கூறுகிறது… மின் வயரை ராம்குமார் வாயால் கடித்து இழுக்கும் அளவுக்கு குறைந்த உயரத்தில் வயர் இருக்க வாய்ப்பு உள்ளதா?

வீட்டிலிருக்கும் மின் இணைப்புகளில் கசிவு ஏற்பட்டாலோ அல்லது இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ தானாகவே மின்சாரப் பாய்ச்சல் துண்டிக்கப்படும் வசதிகள் உண்டு. குறைந்தபட்ச அழுத்தத்தில் பெறப்படும் மின்சார இணைப்புகளுக்கே இப்படிப்பட்ட வசதிகள் உள்ளபோது, அதிக அழுத்தத்தில் செயல்படும் மின்சாதனங்களுக்குத் தாமாகவே துண்டித்துக்கொள்ளும் வசதியுடன்தான் அவை பொருத்தப்படும்.

எனவே, மின் வயரைக் கடித்துத் தன்மீது மின்சாரத்தைப் பாய்ச்சிக்கொண்டு உயிரைவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. இறந்தவரின் உடலிலுள்ள காயங்கள் இறப்பதற்கு முன் ஏற்பட்டிருக்கலாம் என்றால் அக்காயங்களுக்கான காரணங்களை சிறை அதிகாரிகள்தான் நியாயப்படுத்தவேண்டும்.

ராம்குமார் மரணத்தின் பின்னராவது சிறைத் துறையினருக்கு, தாங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?

ஒவ்வொரு கைதியும் நீதிமன்ற ஆணையின்(வாரன்ட்)படிதான் சிறையில் வைக்கப்படுகிறார்கள். அவர்களை தீங்கின்றி கவனித்துக்கொள்ளும் பொறுப்பு சிறை அதிகாரிகளுக்கு உண்டு. கிட்டத்தட்ட கைதிகளின் காப்பாளர்களாக அவர்கள் செயல்பட வேண்டும்.

சிறைக்கைதி ஒவ்வொருவரும் சந்தேகமான சூழ்நிலையில் மரணிக்கும்போது, அதற்கான குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தப்படுவது வாடிக்கை. ஆனால் அது நீதி விசாரணை கிடையாது. அந்த விசாரணையில் சாட்சிகள் யாரும் விசாரிக்கப்பட மாட்டார்கள்.

எனவே, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த சிறைச்சாலையை புழலுக்கு மாற்றிய போது அனைத்து வசதிகளையும் பெற்ற, நவீனப்படுத்தப்பட்ட சிறைச்சாலை என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த சில வருடங்களாக அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அந்த சமாதானத்தை உறுதிப்படுத்தவில்லை.

கைதிகளே தயாரித்து விற்பனை செய்த விற்பனைக்கூடம் திடீரென்று சிறை அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளால் மூடப்பட்டது. செல்பேசிகள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் பெருகிவிட்டன.

மேலும், வெளியில் உடல்நலத்துடன் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்படும் கைதிகள் சிறையிலேயே மரணமடைவதும் அதற்கு உடல் சுகவீனம் என்று சிறை அதிகாரிகள் கூறுவதும் நம்பும்படியாக இல்லை. சிறையில் சதித்திட்டம் தீட்டப்பட்டு வெளியில் நடக்கும் தொடர்கொலைகளுக்கும் முடிவு கட்டவில்லை.

இந்தக் காரணங்களால் புழல் சிறையின் நடவடிக்கைகளைப் பற்றியும் ஒரு பொது விசாரணை தேவை.

– Vikatan

 

By

Related Post