சர்வதேச விளையாட்டு அரங்கில் உயரியதும் உன்னதம் வாய்ந்ததுமான கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 31 ஆவது அத்தியாயம் பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் கோலாகல ஆரம்ப வைபவத்துடன் இன்று தொடங்குகின்றது.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடத்தில் நடைபெறும் நவீன கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா, அதன் 120 வருட வரலாற்றில் தென் அமெரிக்க நாடொன்றில் அரங்கேற்றப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
ஒற்றுமை, நட்புறவு, சகோதரத்துவம், புரிந்துணர்வு ஆகியவற்றின் சின்னமாக ஒலிம்பிக் விளையாட்டு விழா திகழ்கின்றது.
இம் முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 14,000க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் 39 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 306 நிகழச்சிகளில் தத்தமது அதி உயரிய ஆற்றல்களை வெளிப்படுத்தி தங்கப் பதக்கங்களை வென்றெடுக்கும் முயற்சியில் இறங்கவுள்ளனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் அகதிகள் ஒலிம்பிக் அணியினர் முதல் தடவையாக பங்குபற்றுவதுடன் கோசோவோ, தென் சூடான் ஆகிய நாடுகள் தனிநாடுகளாக பிரகடனப்படத்தப்பட்ட பின்னர் பங்குபற்றும் முதலாவது ஒலிம்பிக் இதுவாகும்.
ஆரம்ப விழா
இவ் விளையாட்டு விழாவின் தொடக்க விழா மரக்கானா விளையாட்டரங்கில் பிரேஸில் நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு (இலங்கை நேரப்படி நாளை சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு) ஆரம்பமாகி 3 மணித்தியாலங்கள் நீடிக்கவுள்ளது.
இந்த ஆரம்ப விழாவில் பிரேஸில் தேசத்தின் கலை, கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன், இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
ஆரம்பவிழாவின்போது வழமைபோல் வீர, வீராங்கனைகளின் அணிவகுப்பு, வரவேற்புரைகள், ஒலிம்பிக் கொடி ஏற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், வீர, வீராங்கனைகள் மற்றும் மத்தியஸ்தர்கள் சார்பில் சத்திய பிரமாணம் செய்தல் என்பன இடம்பெறவுள்ளன.
புதிய உலகம் என்ற தொனிப் பொருளில் நடத்தப்படும் ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆரம்ப வைபவம் 60 வயதுடைய பணிப்பாளர் பெர்னாண்டோ மெரிலெஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர் நான்கு தடவைகள் அக்கடமி விருதுக்கு பிரேரிக்கப்பட்டவராவார்.
அமைதி, சமாதானம் ஆகியவற்றை பெரிதும் விரும்பும் பிரேஸில் மக்களின் உணர்வலைகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் நாட்டு மக்களின் எதிர்கால அபிலாஷையைப் பிரதிபலிக்கும் வகையிலும் ஆரம்ப விழாவை அவர் தயாரித்து வழங்கவுள்ளார்.
ஆரம்ப விழாவில் பன்னாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பங்குபற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்களின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஒலிம்பிக் விளையாட்டு விழா ரியோ டி ஜெனெய்ரோவில் நான்கு பிரதான இடங்களை மையப்படுத்தி நடைபெறவுள்ளது. பரா, கோபாகபானா, டியோடோரோ, மரக்கானா ஆகிய வலயங்களில் அமைக்கப்பட்டுள்ள 34 அரங்குகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த 34 அரங்குகளில் 9 அரங்குகள் நினைவில் நீங்கா மரபு சின்னங்களாக நிரந்தரமாக்கப்படவுள்ளன.
ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முன்னிட்டு 50,000 தொண்டர்கள் பணியாற்றுவதுடன், இலங்கை உட்பட 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 20,000 மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இங்கு கூடியுள்ளனர்.