Breaking
Wed. Dec 25th, 2024

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்திருக்கும் வாக்குமூலமானது போலியானது எனவும், அவற்றை பாராளுமன்ற உறுப்பினர் முற்றாக மறுத்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மஹிந்த திஸாநாயக்கவுக்கு தனது சேவையாளரான பதியுதீன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை எனவும் அவருடன் எந்தவொரு உரையாடல்களையும் நடத்தவில்லை என்பதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என மறுத்துள்ளார்.

குருநாகல் அரச பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டையும் முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.

குறித்த சாட்சியாளரான திஸாநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களை பரிசீலனை செய்து, இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதன் மூலம் திஸாநாயக்கவின் போலியான வாக்குமூலம் அம்பலமாகும் என ரிஷாட் பதியுதீன் பெரிதும் நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

எனது சேவையாளர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தெரிவிக்கப்படும் ஏதாவதொரு விடயத்தையும், சாட்சியங்களின் போது அவர் குறித்த பொய்யான விடயங்களையும் சில ஊடகங்கள் பூதாகரப்படுத்தி விளம்பரம் செய்கின்றன. ஆனால் தனது சேவையாளர், தன்மீது சுமத்தப்படும் போலியான விவகாரங்கள் தொடர்பில், அவ்வப்போது மறுப்புக்களை வெளியிட்டாலும் கூட ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சிலவேளைகளில் அதனை விளம்பரப்படுத்துவதும் இல்லை என்றும் சட்டத்தரணி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது சேவையாளரான ரிஷாட் பதியுதீன் கடந்த 20 வருடங்களாக தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கின்றார். எனினும், ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் தொடர்பில் தெரிவிக்கப்படும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை சத்தியக் கடதாசி மூலம் உறுதிப்படுத்தி தெரியப்படுத்திய சந்தர்ப்பங்களிலும் கூட, எந்த ஊடகங்களிலும் அவை பிரசுரிக்கப்படாமை குறித்தும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் விளைவாக தொடர்ச்சியான, ஒருதலைப்பட்சமான ஊடக அறிக்கைகள் மூலம் மக்கள் மத்தியிலே ரிஷாட் பதியுதீன் தொடர்பில் பிழையான கருத்துக்கள் சித்தரிக்கப்படுகின்றன.

அதேபோன்று, மஹிந்த திஸாநாயக்கவுக்கு தொலைபேசி அழைப்புக்கள் எடுத்ததான போலியான குற்றச்சாட்டுக்கும் சில ஊடகங்கள் பெரிதும் முக்கியத்துவமளித்து, தனது சேவையாளர் ரிஷாட் பதியுதீனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணி அறிவித்துள்ளார்.

Related Post