இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் அழைக்கப்பட்டு சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 9ம் திகதி ஆகும் போது இந்த ஒளிநாடாக்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் செய்த முறைப்பாட்டை அடுத்தே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.
இதற்கு முன்னர் இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸ் பொறுப்பதிகாரியும் பிரதேசத்துக்கு பொறுப்பான மேலதிக பொலிஸ் அத்தியட்சகரும் ரொஹான் வெலிவிட்டவை விசாரணைக்குட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாக இருந்த போதும் முன்னாள் ஜனாதிபதியின் படங்களடங்கிய இவ்வளவு பெருந்தொகை ஒளிப்பதிவு நாடாக்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியும் பொருட்டு புலனாய்வுப் பிரிவினர் பரந்தளவிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளில் பல தகவல்கள் வெளிவந்திருப்பதாகவும் மேலும் தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டே ரொஹான் வெலிவிட்ட தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த ஒளிப்பதிவு நாடாக்களின் உரிமை ரொஹான் வெலிவிட்டவின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ரொஹான் வெலிவிட்ட தனது சட்டத்தரணிகள் சகிதம் நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சமுகமளித்து வாக்குமூலமளித்துள்ளார். இதன் போது 2015 ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகச் சேவையிலிருந்து விலகிச் சென்றதாகவும் அந்த ஒளிப்பதிவு நாடாக்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.