இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியர்கள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைவர் ரிஷாட் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, (கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)
கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு,
இலங்கையில் புகலிடம் கோரி வரும் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் தீர்மானம் குறித்து மிகுந்த கவலையுடன் உங்களுக்கு அறியத் தருகின்றேன். தங்கள் நாட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் இந்த மக்களின் நல்வாழ்வைக் கருத்திற்கொண்டு, சர்வதேச மனிதாபிமான கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.
மியான்மரில் நிலவும் கடுமையான வன்முறை மற்றும் அடக்குமுறை காரணமாக, ரோஹிங்கியா மக்கள் நம் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் இலங்கைக்கு வந்திருப்பது, உண்மையாகவே உயிர் அச்சுறுத்தலுக்காவே அன்றி, பொருளாதார புலம்பெயர்ந்தோராக அல்ல. ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகம் இந்த நபர்களின் அவலநிலையை அங்கீகரிக்கிறது, மேலும் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்கும் ஒரு நாடாக, அவர்கள் பாதிக்கப்படக்கூடிய நேரத்தில், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவது நம்மீது கடமையாகும்.
அகதிகள் மீதான சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுடன் எங்கள் நடவடிக்கைகள் ஒத்துப்போவதை உறுதி செய்ய வேண்டும், principle of non-refoulement – தனிநபர்கள் தங்கள் உயிருக்கு அல்லது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இடங்களுக்கு திருப்பி அனுப்புவதைத் தடை செய்தல், இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதன் மூலம், பாதிக்கப்படக்கூடிய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமன்றி, சர்வதேச மனிதாபிமான தரங்களுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பை நிரூபிக்கவும் இது உதவும்.
வரலாற்று ரீதியாக, இலங்கை துன்புறுத்தலுக்கு ஆளாகியவர்களுக்கு புகலிடமளிக்கும் ஒரு நாடாக இருந்து வருகிறது. பல இலங்கையர்கள் யுத்த காலங்களில் வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்துள்ளனர். ரோஹிங்கியா அகதிகளின் தற்போதைய நிலைமை, கடந்த காலத்தில் ஒரு தேசமாக நாம் எதிர்கொண்ட போராட்டங்களை பிரதிபலிக்கிறது என்பதை நினைவில்கொள்வது மிகவும் முக்கியமானது. மியன்மாரில் இந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் இன்னும் ஆபத்தில் உள்ள நிலையில், அவர்களை வலுக்கட்டாயமாக மியான்மருக்கு திருப்பி அனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று, இந்த அகதிகள் இலங்கையில் தங்கியிருக்கும் வரை, அவர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் கைதிகளாகக் கருதப்படாமல், நமது அன்பும் ஆதரவும் தேவைப்படும் மக்களாகக் கருதப்பட வேண்டும்.
மேலும், இந்த அகதிகள் தங்களுக்கு மீள்குடியேறக்கூடிய பொருத்தமான, பாதுகாப்பானதாகக் கருதப்படும் மூன்றாவது நாட்டை அடையாளம் காண்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைப்பது பொருத்தமானதாக இருக்கும்.
நன்றி.
இப்படிக்கு,
ரிஷாட் பதியுதீன்,
பாராளுமன்ற உறுப்பினர், தலைவர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்