பர்மிய அரசாங்கத்தின் இனவாத, பாராபட்ச கொள்கையினால் பல தசாப்த காலமாக தொடர்ந்தும் கொல்லப்பட்டும்,அகதிகளாக்கப்பட்டும் ,அச்சுறுத்தப்பட்டும் வருகின்ற ரோகிங்கா மக்களின் துன்பத்தில் தோய்ந்து, அந்த மக்களைஒடுக்குகின்ற பர்மிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதும், ரோகிங்க மக்களின் மீதான கொடூர அடக்குமுறையை உலகளவில் வெளிக்கொண்டு வருவதும் நம் அனைவரினதும் உடனடிக் கடமையாக உள்ளது.
காலத்திற்கு காலம் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகின்ற ரோகிங்க மக்களின் மீதான கொடூர அடக்குமுறையின் கொடுந்தன்மையை சர்வதேச மயப்படுத்த அனைத்துவகை முயற்சிகளையும் எடுப்பதுடன், அந்த மக்கள் மீதான ஒடுக்குதலை தடுத்து நிறுத்த உலக நாடுகளையும் , சர்வதேச அமைப்புகளையும் மனித உரிமை நிறுவனங்களையும் கோருவதும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிப்பதும் இன்று மிக முக்கியமானது.
இந்த மனிதாபிமான கோரிக்கையை முன்னிறுத்தியே எதிர்வரும் 06ம் திகதி சனிக்கிழமை லண்டனில் , அனைத்து மக்களையும், ஜனநாயக அமைப்புகளையும் , மனித உரிமைவாதிகளையும் இணைத்து இந்த நிகழ்வுமுன்னெடுக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையே உனது மௌனத்தினை கைவிடு! பிரித்தானிய அரசே உனது காலனித்துவக் கொள்கையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி வழங்க அழுத்தங்களை பிரயோகி! சர்வதேச சமூகமே உடன் தலையீடு செய்! ஊடகங்களே , மனித உரிமை அமைப்புகளே நீண்ட காலமாய் கூட்டு இனப்படுகொலைக்கும் வன்முறைக்கும் இலக்காகும் ரோகிங்கா மக்களின் இனப் பாதுகாப்புக்கு உத்தரவாதமளி என்பன இந்த நிகழ்வின் பிரதான அழுத்தக் கோரிக்கைகளாக முன்னெடுக்கப்படவுள்ளன.
முழுமனித குலமே வெற்கித்தலைகுனியும் பர்மிய அரசின் இன அடக்குமுறைக்கும் ஒடுக்குதலுக்கும் எதிரான வெகுஜன போராட்டத்தித்தினை மக்களின் வேண்டுதலுக்கு இணங்க நாம் முன்னெடுக்கிறோம். இந்த மக்கள் வெகுஜன ஆர்ப்பாட்ட நிகழ்வினை அடுத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை, பிரித்தானியா அரசாங்கம், மற்றும் மனித உரிமை நிறுவனங்களுக்கு
கலந்துகொள்ளும் மக்கள் சார்பில் கோரிக்கை மனு கையளிக்கப்படவுள்ளது.
தேச, இன எல்லைகள் கடந்து ஒடுக்கப்படுகின்ற, இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்ற, வாழ்ந்த மண்ணைவிட்டு பலாத்காரமாக துரத்தியடிக்கப்படுகின்ற , குரலற்ற விளிம்பு நிலை மக்களின் மனிதத் துயரினை துடைப்பதற்காக அனைத்து மக்களும் , அமைப்புகளும் இந்த அடையாள எதிர்ப்பு நிகழ்வில் கலந்து ஆதரவு வழங்க வேண்டுமென தோழமையுடன் அழைக்கிறோம்.
புலம்பெயர்ந்தோர் இலங்கை முஸ்லிம் அமைப்பு
OVERSEAS SRILANKAN MUSLIM ORGANASATIOM – (SLMDI)