Breaking
Fri. Nov 22nd, 2024

-சுஐப் எம். காசிம் –

அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு அட்டூழியங்கள் இடம் பெற்று சுமார் இரண்டு வாரங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரை அழைத்து கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார்.

அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நியாயம் கேட்டு கொதித்தெழுந்து நாட்டுத்தலைவரையே நிலை குலையச் செய்தவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனே என்று முன்னாள் அமைச்சர் பிரபா கணேசன் இன்று மாலை தெரிவித்தார்.
சாய்ந்தமருது பன்னூல் ஆசிரியர் எம்.எம்.எம். நூறுல் ஹக் எழுதிய “முஸ்லிம் அரசியலின் இயலாமை” எனும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இடம் பெற்ற போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபா கணேசன் மேலும் கூறியதாவது:

“முஸ்லிம் அரசியலின் இயலாமை” என்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எனக்கு றிஷாட் பதியுதீனின் துணிச்சலும், சமூக உணர்வும் நினைவுக்கு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அப்போது நடத்திய அந்தக் கூட்டத்தில் றிஷாட் பதியுதீன் துணிவுடன் எழுந்து முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அநியாயங்களையும் தட்டிக் கேட்டார். அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, றிஷாட் பதியுதீனை எதிர்த்து முரண்பட்ட போது இருவருக்குமிடையிலே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் பாரியளவில் வெடித்து கைகலப்பாக மாறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருந்தது.

அப்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது ஆசனத்தை விட்டு எழுந்து கைகளைக் காட்டி இருவரையும் அமரச்செய்தார். இந்த வாக்குவாதத்தில் றிஷாட் பதியுதீனுக்காக குரல் கொடுத்தவர் அப்போதைய அமைச்சரும் தற்போதைய எம்.பியுமான வாசு தேவ நாணயக்கார மாத்திரமே.

றிஷாதின் சமூக உணர்வைக் கண்டு நான் மெய் சிலிர்த்துப் போனேன்.

அமைச்சர் றிஷாட் எனது நல்ல நண்பரும் கூட. அவர் இந்த சபையில் இருப்பதற்காக நான் இந்த விடயத்தை இங்கு கூறவில்லை. மேல் மாகாண சபைத் தேர்தலில் எனது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி அவரது கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டதை நான் நன்றியுடன் நினைவு கூர விரும்புகிறேன்.

கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் உட்பட ஏனைய சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் அக்கிரமங்கள் நடந்தன. எனினும் அப்போது எங்கள் எதிரியை நேரடியாக எம்மால் காண முடிந்தது. அவர்களை அடையாளப்படுத்தவும் முடிந்தது. இந்த நல்லாட்சியில் எமக்கெதிராகச் செயற்படும் எதிரிகளை எம்மால் இனம் காண முடியாதுள்ளது.

அடையாளப்படுத்த முடியாதிருக்கின்றது. சிறுபான்மைக் கட்சிகள் இந்த விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என நான் வேண்டுகோள் விடுப்பதுடன் இந்த ஆட்சி தொடர்பில் இருக்கும் ஒரு வித மாயையில் இருந்து நாம் தெளிவு பெற வேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கிறேன்.

13942614_627556324077083_1188868122_n 13933362_627555984077117_1394574895_n

 

By

Related Post