Breaking
Fri. Nov 15th, 2024

– சுஐப் எம்.காசிம் –

அமைச்சர் றிஷாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்றி, தான் மக்கள் பணியில் ஈடுபட ஆசைப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். நேற்று மாலை (25/04/2016) யாழ் உஸ்மானியா கல்லூரியில், மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அங்கஜன் எம்.பி இவ்வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான், ஜனாப் ஜமால், அல்ஹாஜ் முபீன் ஆகியோர் உட்பட உரையாற்றினர்.

அங்கஜன் எம்.பி கூறியதாவது,

யாழ் மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்பட்டேன். கடந்த பல ஆண்டுகளாக முஸ்லிம் மீள்குடியேற்றப் பிரச்சினையை விரைவில் தீர்ப்போம், விரைவில் தீர்ப்போம் என்று கூறுகின்றார்களே தவிர, எதுவும் தீர்ந்தபாடில்லை. உருப்படியாக எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கூட்டம் ஒன்றின்போது, வடமாகாண மக்களின் பிரச்சினைத் தொடர்பில் அங்கு பிரசன்னமாகி இருந்தோர் சுட்டிக் காட்டினர். அந்த வேளையில் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அகதிகளாக இருந்து மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு திரும்பியுள்ள முஸ்லிம்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென, நான் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினேன். அப்போது அங்கு பிரசன்னமாகி இருந்த அமைச்சர் றிஷாத் பதியுதீனைக் காட்டி, இவரும் அவ்வாறு பாதிக்கப்பட்டவரே. இவருடன் இணைந்து யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையாளுங்கள் என ஜனாதிபதி கூறினார். அதன் பின்னர் நாம் இணைந்து மேற்கொண்ட முயர்சிகளின் பலனாகவே, நேற்று யாழ் கச்சேரியில் நடைபெற்ற உயர் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதாக முடிவெடுக்கப்பட்டது.

யாழ் முஸ்லிம்களின் பிரச்சினையை அமைச்சர் றிசாத் பதியுதீனூடாக கையாண்டு, தீர்க்க முடியுமென்ற எனது நம்பிக்கை வீண்போகாமல் கைகூடி இருக்கின்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அரசியல் வாழ்வில் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற போதும், அதனைச் சவாலாக ஏற்று வெற்றிகொள்கின்றார். இந்த விடயத்திலும் அவர் வெற்றிகொள்வார் என்றும் அங்கஜன் எம்.பி நம்பிக்கை வெளியிட்டார்.

711786af-125e-4c76-a172-a77e7f3dbefc

93fceff7-e27d-4e78-b70c-3133c418a6e2

By

Related Post