Breaking
Fri. Nov 15th, 2024
– ஏ.எச்.எம்.பூமுதீன் –
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிக்கும் அமைச்சர் றிஷாதுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
ஒக்டோபர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில், அரசு மாற்றான்தாய் மனப்பாங்கோடு செயற்படுவதாக கடும் தொணியில் ஆக்ரோசமாக றிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் பிற்பாடு ஜனாதிபதி மைத்திரியின் விசேட வேண்டுகோளுக்கு அமைய றிஷாத் பதியுதீனுடனான நேற்றைய சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் 02.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் இச்சந்திப்பு ஆரம்பமாகி 03.15 மணிக்கு நிறைவு பெற்றது.
மைத்திரி – றிஷாத் பதியுதீனுக்குமிடையிலான நேற்றைய இச்சந்திப்பில் மீள்குடியேற்ற அமைச்சர் என்ற ரீதியில் சுவாமிநாதனும் அரசின் முக்கிய அமைச்சர் என்ற வகையில் ராஜித, சம்பிக்க, சஜித் என இன்னும் பலரும் பங்கு பற்றியிருந்தனர்.
இச் சந்திப்பை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதில் உள்ள சவால்கள் தொடர்பில் விசேட கருத்துக்களை கூறுமாறு அiமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கிணங்க றிஷாத் பதியுதீன் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தகுந்த புள்ளிவிபரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் பூரண விளக்கம் ஒன்றை வழங்கினார்.
இதனையடுத்து மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனை நோக்கிய ஜனாதிபதி, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அதன் தற்போதைய செயற்பாடுகள் என்பன தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் தன்னிடம் சம்ர்ப்பிக்கும் படி வேண்டிக்கொண்டார்.
அத்துடன் றிஷாத் பதியுதீன் வேண்டிக் கொண்டதற்கிணங்க இரண்டு விசேட குழுக்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதி உடன் உத்தரவுகளை பிறப்பித்தார்.
முதலாவது குழு தேசிய மட்ட ரீதியிலானதும் இரண்டாவது குழு மாகாண மட்ட ரீதியிலானதுமாகும். தேசிய மட்ட குழுவின் தலைவராக மீள்குடியேற்ற அமைச்சர் என்ற ரீதியில் சுவாமிநாதன் தலைமை வகிப்பார் என  இதன்போது ஜனாதிபதியினால் பிரகடனம் செய்யப்பட்டது.
இந்தக் குழுவில் றிஷாத்  பதியுதீன் உட்பட இன்னும் சிலரும் அங்கம் வகிப்பார்கள் என ஜனாதிபதி அங்கு மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மாதத்திற்கு ஒரு தடவை இக்குழு கூடும் என்றும் 03 கூட்டங்களின் பிற்பாடு அதாவது 03 மாதங்களுக்கு ஒரு முறை குறித்த குழுவுடன் ஜனாதிபதி மைத்திரி விசேடமாக கலந்துரையாடுவார் என்றும் நேற்றைய றிஷாத் – மைத்திரி சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் சிலாபத்துறையில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம் தடையாக இருப்பதாக றிஷாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியபோது, அந்த முகாமை மிகவிரைவில் அகற்றி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு ஒத்துழைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
ஜனாதிபதியுடனான இக் கலந்துரையாடலின்போது வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் ஜனாதிபதி தனக்கு இருந்த சந்தேகங்களை ஏனைய அமைச்சர்களிடம் எழுப்பியபோது – தங்களிடம் எந்த புள்ளிவிபரங்களும், தகவல்களும் இல்லாமையினால்  மௌனமடைந்த அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒரே நேரத்தில், றிஷாத் பதியுதீனை நோக்கினர். இதனையடுத்து ஜனாதிபதியின்
அனைத்து சந்தேகங்களுக்கும் றிஷாத் பதியுதீனே பதிலளித்தார்.
இவ்வாறாக இந்த விசேட சந்திப்பு 03.15 மணியளவில் திருப்திகரமான முறையில் நிறைவுக்கு வந்தது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பங்குபற்றியிருந்தார். ஜனாதிபதியை வேறொரு விடயமாக சந்திக்க வந்தவர் போன்றே இந்த விசேட சந்திப்பு அறைக்குள் நுழைந்து இரு தரப்புக்கிடையிலான கலந்துரையாடல்களை கூட்டம் முடியும் வரை அவதானித்துக் கொண்டிருந்தார்.
மைத்திரி – றிஷாத் கலந்துரையாடல் நிறைவடைந்ததன் பின்னர் அனைத்து அமைச்சர்களும் புறப்படத் தயாரானபோது,   றிஷாதை மட்டும் அழைத்துக் கொண்டு வெளியேறிய ஜனாதிபதி, ஜனாதிபதி மாளிகையில் பிறிதொரு இடத்தில் இரண்டாவது சந்திப்பை மேற்கொண்டார்.
இதன்போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் சமுகத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் விளக்கமாக றிஷாத் பதியுதீனிடம் கேட்டறிந்தார் எனவும் தெரியவருகின்றது.

By

Related Post