இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது கட்டாயமான சமூகக்கடமையாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் நடைபெற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், சங்கைக்குரிய ஆனந்த சாகர தொலைக்காட்சி விவாதம் மூலம் அமைச்சர் ரிசாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டிருப்பதுடன் இது விடயத்தில் துணிச்சலாக தனது நியாயமான கருத்துக்களை முன் வைத்த அமைச்சர் ரிசாதை உலமா கட்சி முஸ்லிம் சமூகம் சார்பாக பெரிதும் பாராட்டுகிறது.
வில்பத்துவில் அத்து மீறிய குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்பதை அமைச்சர் மிகத்தெளிவாக நிரூபித்தார். அமைச்சர் போதை வஸ்த்து வியாபாரம் செய்வதாக கூறியமை தேரரின் பொய்க்குற்றச்சாட்டு என்பது அதற்கான எத்தகைய சான்றுகளையும் அவர் முன்வைக்காமை மூலம் நிரூபணமானது. ஒரு முஸ்லிம் தனது உடமைக்காக மட்டுமல்ல தனது தன்மானத்துக்காகவும் போராட வேண்டியது அவன் மீது கடமையாகும். அந்த வகையில் தனது உரிமையை வீறு கொண்டு நிரூபித்த அமைச்சர் ரிசாத் பதியுதீனின் திறமை எதிர்கால இளைஞர்களுக்கு நல்லதொரு தைரியத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது எனலாம்.
2005ம் ஆண்டு உருவான உலமா கட்சி தனிக்கட்சியாகவே செயற்பட்டு வருகிறது. எந்த முஸ்லிம் கட்சியுடனும் இரண்டற கலக்கவில்லை. ஆனால் 2010ம் ஆண்டு அமைச்சர் ரிசாத் சிறந்த அரசியல் தலைவர் என்பதை முதலில் இனம்கண்ட முஸ்லிம் கட்சி என்றால் உலமா கட்சி மட்டுமேயாகும். அதனால் அவரது கட்சியுடன் உலமா கட்சி இணைந்து செயற்பட்டதுடன்; அவரின் கட்சி பாரிய அளவில் வலுப்பெற ஒத்துழைத்தது.
சில புரிந்துணர்வுகளில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 2012ல் உலமா கட்சி, அமைச்சர் ரிசாதிடமிருந்து கவுரமாக வெளியேறியது. ஆனாலும் அவரது செயற்பாடுகளில் நல்லவற்றுக்கு ஆதரவு வழங்க தவறவில்லை. இந்த வகையில் தற்போதைய சூழலில் அமைச்சர் ரிசாதின் கைகளை பலப்படுத்த வேண்டியது ஒவ்வொரு இலங்கை முஸ்லிமினதும் கடமையாக உலமா கட்சி பார்க்கிறது.
; கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு அமைச்சர் ரிசாத் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவும், வட புல முஸ்லிம்களின் விமோசனத்திற்காகவும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென்பதை உலமா கட்சி வலியுறுத்துகிறது.