Breaking
Sun. Dec 22nd, 2024

மஹிந்த அரசாங்கத்தைவிட்டு றிஷாத் பதியுதீன் வெளியேறியதனாலேயே பொதுபலா சேனா போன்ற இயக்கங்கள் அவரைத் தொடர்ச்சியாகத் தாக்கி வருகின்றன.

மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் றிசாத் இருந்திருந்தால், அவரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு வடக்கு, கிழக்கு பிரதான சங்க சபா தலைவர் சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் கூறினார்.

வவுனியா மகா போதியில் தேரரின் தலைமையிலான பௌத்த தூதுக் குழுவினரை, அமைச்சர் றிசாத் சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இந்த சந்திப்பின்போது வவுனியா, உளுக்குளம் ஸ்ரீ சுமணராப்பதி, சுமணதிஸ்ஸ தேரோ, வெலி ஓயா பௌத்த விகாராதிபதி ஆகியோரும் கலந்துகொண்டு, அமைச்சர் றிசாத் வவுனியா சிங்களப் பிரதேச மக்களுக்கு செய்த பணிகளைப் பாராட்டிப் பேசினர்.

விமலசார தேரர் கூறியதாவது,

றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்துக்குச் சென்ற நாள் தொடக்கம் எமக்கு சேவையாற்றி வருபவர். யுத்த சூழ்நிலையில் நாங்கள் பட்ட கஷ்டங்களை தீர்ப்பதற்கு அவர் பெரிதும் கஷ்டப்பட்டார்.  சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதமின்றி அவர் உதவி வருவதால், நாம் வாழ்கின்ற இந்தப் பகுதியில் யுத்த காலத்தில் அடிக்கடி துப்பாக்கி வேட்டுக்களும், கொலைகளும் இடம்பெற்று வந்தபோதும், தனது உயிரைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல், இங்கு வந்து பயத்திலே வாழ்ந்துகொண்டிருந்த எங்களுக்கு தைரியம் ஊட்டி உதவிகளையும் செய்தவர்.

சமாதான காலத்திலும் எமது விகாரைகளைப் புனரமைப்பதற்கும், இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அவரே உதவி வருகின்றார். வவுனியாவைச் சேர்ந்த எந்த எம்பியும், எமது விகாரைகளை புனரமைக்க ஐந்து சதமேனும் தரவில்லை. ஆனால் றிசாத் நாம் கேட்ட உதவிகளை எல்லாம் செய்து தந்திருகின்றார்.

இப்போது இனவாதம் பேசும் இயக்கங்கள், நாங்கள் கஷ்டப்பட்ட போதும் உதவ முன்வரவில்லை. இப்போதும் இந்தப் பக்கம் வருவதுமில்லை. எமக்கு உதவும் றிசாத் பதியுதீன் மீது வெறுமனே குற்றச்சாட்டுக்களை மட்டுமே சுமத்தி வருவது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இனவாத இயக்கங்கள் பௌத்த கருமத்தையும் , புத்தர் போதித்த பண்புகளையும் மீறி நடக்கின்றனர். இனங்களுக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கும் நிகழ்ச்சி நிரலிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். என்றார்.

By

Related Post