Breaking
Sat. Nov 2nd, 2024

-இர்ஷாத் றஹூமத்துல்லா –

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தனவந்தர்களிடமும்,புத்தி ஜீவிகளிடமும் இரண்டு விடயங்களில் பங்காளிகளாகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாத் பதியுதீன்.
அவைகளாவன;
1.முஸ்லிம் சமூகத்தின் கல்வித்துறை
2.முஸ்லிம் சமூகத்தின் ஊடகத்துறையாகும் – என்று கூறினார்.

இலங்கை முஸ்லிம் வர்த்தக சம்மேளம் நேற்று (2015-01-11) இரவு தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீனுக்கு அளித்த பிரமாண்டமான வரவேற்பு வைபவத்தினை நடத்தியது.

ஜனாதிபதி சட்டத்தரணியும்,பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன்,எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,முன்னால் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹூசைன் பைலா,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.பொறியியலாளர் சிப்லி பாருக்,மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான துறைசார்ந்தவர்கள் இதன் போது சமூகளித்திருந்தனர்.

ஜமிய்யத்துல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி,கொழும்பு நகர ஜமிய்யத்துல் உலமா சபை தலைவர் யூசுப் முப்தி,ஆகியோரின் உரைகள் இடம் பெற்றன.
கொழும்பு பல்கலைக்கழக அரசியல் துறை விரிவுரையாளர் கலாநிதி அனீஸ் இலங்கையின் அரசியல் மாற்றமும்,சமூகத்தின் பங்களிப்பும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் –

இன்று இந்த உயர் பதவிக்கு வருவதற்கு வன்னி மாவட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களின் அயராத உழைப்பும்,அவர்களது தியாகங்களுமே காரணமாகும்.இடம் பெயர்ந்து அகதிகளாக இருந்த மக்கள் எனக்கு வாக்களித்து பாராளுமன்றம்.அனுப்பினர்.இன்றைய அரசியல் மாற்றத்தின் போது நான் அவர்களுடன் கலந்துரையாடிய போது அம்மக்கள் எம்மிடம் தெரிவித்த கருத்தானது மிகவும் வியப்புக்குரியது.இந்த நாட்டு சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு,விமோசனம் தொடர்பில் நீங்கள் எடுக்கின்ற எந்த தீர்மானமாக இருந்தாலும் சரி,அந்த தீர்மானத்தால் நாங்கள் எந்த கஷ்டத்தையும் சுமக்க தயாராக இருக்கின்றோம் என்று ,இந்த நேரத்தில் அம்மக்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ளுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

2005 ஆம் ஆண்டு முதல் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை ஜனாதிபதியாக ஆக்குவதில் எமது கட்சி பெரும் பங்களிப்பினை செய்துவந்துள்ளது.அந்த அரசாங்கத்தில் பலமிக்க 17 நிறுவனங்களை உள்ளடக்கிய அமைச்சொன்றினை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.இந்த அமைச்சின் ஊடாக இந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும்,நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை அதிகரிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இதய சுத்தியுடன் செய்துள்ளேன்.இந்த காலத்தில் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கையெடுத்துவந்துள்ளேன்.குறிப்பாக சில ஆயிரம் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இன்னும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமலும் இருக்கின்றனர்.இந்த மண்டபத்தில் இருக்கின்ற சில தனவந்தர்கள் இம்மக்களுக்கான வீடமைப்புக்களை செய்து தந்துள்ளனர்.அதற்காகவும் நன்ஙி கூறுகின்றேன்.

இன்று நாம் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினையாக கல்வியுள்ளது.கொழும்பு உள்ளிட்ட சில முக்கிய நகரங்களை நாம் எடுத்து நோக்கும் போது கல்வி துறை வீழ்ச்சி கண்டுள்ளது.பொறியியல் துறைக்கு,விஞ்ஞான துறைகளுக்கான பல்கலைக்கழக அனுமதி மிகவும் குறைந்த விகிதாசாரத்தில் இருக்கின்றது.ஏன் இந்த நிலையென பார்க்கின்ற போது,பொருளாதார வறுமை காரணமாகின்றது.இங்கு வந்துள்ள தனவந்தர்களிடம் அன்பான வேண்டுகோளளை விடுக்கவிரும்புகின்றேன்.கற்கின்ற வறிய மாணவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள்.உங்களது பிள்ளைகளை எவ்வாறு கல்வியின் பால் பராமரிக்கின்றீர்களோ,அதே போல் ஏனைய மாணவர்களையும் தங்களது பிள்ளைகள் போன்று பார்த்து உதவி செய்யுங்கள்.

அதே போல் இன்று எமது மதத்துக்கு எதிராக உண்மைக்கு புறம்பமான விசமத்தனமாக போலி பிரசாரங்களை சிலர் முன்னெடுக்கின்றனர்.அதற்காக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.துரதிஷ்டம் எம்மில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் இருக்கின்ற போதும்,அதற்கு எதிராக அவர்கள் எழுத முனைகின்ற போதும் ஊடகங்கள் இல்லாததால் அவர்கள் மனம் விட்டு தமது வேதனையினை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த சவால்களை நாம் எதிர் கொள்ள வேண்டும் எனில் எமக்கான ஒரு ஊடகத் தேவையுள்ளது.அதனை ஏற்படுத்துவது தொடர்பில் வசதி படைத்தவர்கள் தமது பார்வைகளை செலுத்த வேண்டும் என கேட்கவிரும்புகின்றேன்.

அதே போல் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்படுவதற்கு ஒரு போதும் நாம் இடம் கொடுக்க முடியாது,தமிழர்கள்,இஸ்லாமியர்கள்,சிங்களவர்கள் அவர்களது மத காலாசர விழுமியங்களை உரிய முறையில் பேணி நடப்பதற்கான அனைத்து அடித்தளத்தினையும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமையிலான அரசாங்கம் இட்டுள்ளது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் இதன் போது கூறினார்.

றிசாத் பதியுதீன்,விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு பென்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post