ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்த போது, அங்கு ஒன்று கூடிய அக்கிராம முஸ்லிம் பெண்கள் குறித்த நிலையத்தை திறக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, அவர் இங்கு வருகை தந்து அதனைத் திறக்க வேண்டும். இன்றேல் திறக்க விட மாட்டோம் என அங்கு கூடிய முஸ்லிம் பெண்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த நிலையத்தை திறக்கவில்லை எனவும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையிலே அது திறக்கப்படும் என கூறி அங்கிருந்து அவர்கள் சென்றனர். பின்னர் இந்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்கள் சில கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்த விடயத்தில் எது உண்மை எது பொய் என்று அரசியல் ரீதியாக ஆராய்வதனை விடவும் வன்னி முஸ்லிம் பெண்கள் அமைச்சர் ரிஷாத் அவர்கள் தொடர்பில் எந்தளவு நம்பிக்கையையும் விருப்பத்தையும் கொண்டுள்ளனர்.
சில கூறலாம் இல்லை.. இல்லை.. அமைச்சர் ரிஷாத் கூறித்தான் இந்தப் பெண்களை அதனைத் தடுத்தனர் என்று. ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை என்பதனை எனது களப் பரிசோதனையில் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
ஆனால், இந்த விடயங்களை அனைத்தையும் ஒரு தடவை நான் தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்த போது தென்னிலங்கையிலும் வன்னியிலும் அமைச்சர் ரிஷாத்துக்கு ஏன் இவ்வாறன பிரச்சினைகள், எதிர்ப்புகள் எழுகின்றன என்ற கேள்வி எனக்குள் பலமாக எழுந்தது.
அவர் எதிரநோக்கியுள்ள எந்தப் பிரச்சினையும் அவரின் தனிப்பட்ட பிரச்சினையே இல்லை. அது, அவை அனைத்தும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளே ஆகும். இந்த விடயங்களை ஏனோ தெரியாது பலரும் ரிஷாத்தின் பிரச்சினைகளாக காட்ட முயற்சிப்பது.
சம்பந்தன் ஐயா வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அவர்களது குடியேற்றங்கள் தொடர்பில் பேசி நடவடிக்கை மேற்கொண்டால், அதனை தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்று உள்ளுரிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சர்வதேசமும் அதனை வரவேற்கிறது. நாமும் அதனை வரவேற்கிறோம். தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு என்பது நிச்சயம் தேவையானது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால், அதே பிரச்சினைகள் வடக்கில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டால் கதை வேறாக மாறுகிறது. முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள், அவர்களது மீள் குடியேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் நடவடிக்கை மேற்கொண்டால் அதனை ஒருவரும் ஏற்றுக் கொள்கிறார்களும் இல்லை. மாறாக இதுவெல்லாம் ரிஷாதின் பிரச்சினை என்று கூறி விடயத்தை வேறு கோணத்தில் திருப்பி அடி அழித்து விடுகிறார்களே! இது என்ன அநியாயமோ தெரியாது. இந்த விடயத்தை சிந்திக்கும் போது மனம் கனதியாகிறது. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் நம்மவர்களும் சேர்ந்து கொள்வதுதான்.
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் தவிர வேறு எதனைத்தான் இந்த ரிஷாத் கேட்கிறார் என்பதற்கான பதிலை அவரைப் பழி கூறி குற்றம் சுமத்துபவர்கள் தெரிவிப்பதாகவும் இல்லை.
இது தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்றால் அனைத்து தமிழ் தலைமைகளும் தங்களது கட்சி, கொள்கை என்பனவற்றை எல்லாம் ஒரு புறம் தள்ளி வைத்து ஒன்றாக நின்று குரல் கொடுக்கிறார்கள். ஆனால், அமைச்சர் ரிஷாத் முஸ்லிம்கள் தொடர்பிலான பிரச்சினைகளைக் கூறினால் அதனை அவர் பாரத்துக் கொள்ளட்டும்.
அது அவர் பிரச்சினை என்ற நிலையில் நம்மவர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்… என்ன சமூகம் அப்பா இது?
எது எப்படியிருப்பினும் வன்னி முஸ்லிம் மக்களால் அமைச்சர் ரிஷாத் விரும்பப்படும் நபர் என்ற விடயத்தில் சந்தேகம் கொள்ளவே தேவை இல்லை. அவர் அங்கு மக்கள் சக்தியை பெற்றுள்ளார் என்பது மட்டும் நிச்சயம். இதற்கு ஓர் உதாரணமே தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்கு எதிராக எழுந்த எதிர்ப்பாகும்