Breaking
Wed. Dec 25th, 2024

கடந்த காலங்களில் பாரிய நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிறுவனம் இவ்வருடம் முதன் முறையாக 1000 மில்லியன் ரூபா இலாபத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இந்த இந்த விடயத்தை தெரிவித்தார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் இலாபம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனவும் ஏனெனில் 2015 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்கியதாகவும் தெரிவித்த அவர் இந்த வருட இலாபம் அரச கூட்டுத்தாபனம் என்ற வகையில் பெரிய வெற்றி எனவும் குறிப்பிட்டார்.

நிதியமைச்சரின் வரவு செலவுத்திட்ட பிரேரணையில் சீனித்தொழிலை அபிவிருத்தி செய்வதில் காட்டியுள்ள அக்கறையைப் பாராட்டிய அவர் 2017 ஜனவரி 1 ஆம் திகதி நடைமுறைக்கு வரக்கூடிய வகையில் கரும்பின் ஒரு மெற்றிக் தொன்னுக்கான விலையானது ரூபா. 5000  ஆக விதிக்கப்பட்டுள்ளமையையும் அமைச்சர் நினைவுப்படுத்தினார். அத்துடன் மொனராகல, மட்டக்களப்பு, கிளிநொச்சி, அம்பாறை மாவட்ட சீனி ஆலைகளில் முதலிடுமாறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன் கரும்புச்சாற்றை பிழிந்து எடுக்கும் தொழிற்சாலை ஒன்றை வவுனியா செட்டிக்குளத்தில் அமைப்பதற்கான திட்டத்தையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

கரும்பு உற்பத்தியில் ஏனைய வர்த்தக பயிர்களுடன் போட்டியிடக்கூடியவாறு சீனி விலைக்கான நடமுறைச் சூத்திரம் ஒன்றை தயாரிப்பதற்கான எண்ணமிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2016 ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டு உற்பத்தியில் செவனகல மற்றும் பெல்வத்த சீனி ஆலைகளில் 13164 ஹெக்டெயர் கரும்பு செய்கைப் பண்ணப்பட்டுள்ளது (2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.6% அதிகரித்துள்ளது). 551,067மெற்றிக் தொன் கரும்பு அறுவடை செய்யப்பட்டு 44059 மெற்றிக் தொன்னில் அதற்கான பயன் கிட்டியுள்ளது ( 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 2.5% ஆக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது) என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

By

Related Post