சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் நேற்று கல்கிஸ்ஸ நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலையை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் நபர் நீதிமன்றில் சாட்சியமளிக்கக்கூடிய மனோ நிலையில் இருக்கின்றாரா என பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அண்மையில் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது.
இதேவேளை இந்த கொலை தொடர்பிலான சந்தேக நபர்களின் தொலைபேசி மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் முழுமையாக இன்னமும் கிடைக்கவில்லை என புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 41 உத்தியோகத்தர்களின் கடன் விபரங்களை வழங்குமாறும் லசந்த கொலைக்காக பயன்படுத்திய ஆயுதம் பற்றிய விபரங்களை வழங்குமாறும் நீதவான் நேற்று கடன் விபரங்கள் காரியாலயத்திற்கும் இராணுவத் தளபதி மற்றும் லங்கா லொஜிஸ்டிக் நிறுவனத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் லசந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு மேஜரை கம்பஹா நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கல்கிஸ்ஸ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.