Breaking
Mon. Dec 23rd, 2024

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மிக முக்கிய தகவல்கள் பல இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

லசந்த படுகொலை செய்யப்படும்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரிடமிருந்தே இந்தத் தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

இந்த நபரிடமிருந்து பெறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் அடிப்படையில் இரகசியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள இந்த நபர் அப்போது வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

லசந்தவின் படுகொலை தொடர்பாக கல்கிஸ்சை பொலிஸார் மற்றும் மிரிஹானை பொலிஸார் இரு வெவ்வேறு விசாரணைகளை நடத்தியிருந்தனர். கல்கிஸ்சை பொலிஸாரின் விசார ணையின் அடிப்படையில் அன்று சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடமிருந்தும் இந்தப் படுகொலைக்கு தொடர்புடைய முக்கிய தகவல்கள் எதுவும் பெறமுடியாமல் போய்விட்டது. இரகசியப் பொலிஸார் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடந்த காலம் முழுவதும் இரகசியப் பொலிஸார் இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய விரிவான விசாரணைகளை நடத்திவந்தனர். இதன்போது லசந்தவைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பிலான மிக முக்கிய தகவல்களை வழங்கக்கூடிய மேற்படி நபர் தொடர்பாகவும் விபரங்களை இரகசியப் பொலிஸார் திரட்டினர். இவரிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

Related Post