பிரதி வெளிவிவகார அமைச்சர்
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க வருமாறு ஆணையிடப்பட்டால் இந்நாட்டில் எந்தவொரு பிரஜையும் வருவதற்கு கடமைப்பட்டுள்ளனர். முடியாது என்று சொல்வதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
இலங்கையிலுள்ள பௌத்த குருமார்கள்- கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட அனைத்து மத போதகர்கள் உட்பட மக்களின் தேவை 19ஆம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதே. ஜனாதிபதி மைத்திரிபால- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்களின் நலன் கருதி அரசியல்வாதிகளின் பலத்தை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தை பிற்போடவே எதிர்கட்சியின் சில உறுப்பினர்கள் பாராளுமன்றில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டனர்.
பல்வேறு தடைகளை தாண்டி சட்ட சிக்கல்களை தீர்த்த தற்போது பாராளுமன்ற விவாதத்திற்கு கொண்டு வரும் போது- முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அழைக்கப்பட்டதை காரணமாக காட்டி குழப்பம் விளைவிக்கின்றனர்.
ஏனெனில் ஒரு சிலருக்கு இரண்டு தடவை மட்டுமே ஜனாதிபதியாக ஆட்சி செய்ய முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 6 வருட ஆட்சிக்காலத்தை 5 வருடங்களாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்ட ஆணைக்குழு சுதந்திரமாக இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரச நிதியை பாதுகாக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக மொழிப் பிரச்சினையின்றி வாழ மொழிகளுக்கான ஆணைக்குழுவை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான் 19ஆம் திருத்தச்சட்டதை பிற்போட ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இதன் காரணமாக அவ்விவாதம் 27ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது. இந்நிலையை மாற்ற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
27ஆம் திகதி அச்சட்டம் நிறைவேற்றப்படாவில்லை பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும். அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அவர் நேர்மையானவர். அவரை நாம் நம்புகிறோம். அவர் அதற்கான செயற்பாட்டை முன்னெடுப்பார்.
இலங்கை அரசியல் யாப்பில் அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்றுதான் உள்ளதே தவிர வாக்குமூலம் எடுக்கவோ விசாரணை செய்ய முடியாது என்றோ கூறப்படவில்லை. அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடிகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய முடியும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான வோட்டர்ஸ் எட்ஜ் வழக்கு தொடரப்பட்டபோது உயர் நீதிமன்றம் இருபது லட்சம் செலுத்துமாறு உத்தரவிட்டது. அவர் அப்பணத்தை செலுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாக்குமூலம் பெறவே வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு பாரிய ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
நாம் இருக்கமான வெளிநாட்டுக் கொள்கைகளை விடுத்து நட்புரீதியான வெளிநாட்டுக்கொள்கைகளையே பின்பற்றுகிறோம். கோபமாக இருந்த மேற்கத்தேய நாடுகளுடன் தற்போது கைகோர்த்துள்ளோம். சர்வதேச விசாரணை என்ற விடயம் தொடர்பில் தற்போது பேசப்படுவதில்லை.
ஐநா பிரதிநிதி இலங்கை வந்தபோது உள்நாட்டு விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்குமாறு கூறினார். எமக்கும் சீனாவுக்கு உறவில் பிரச்சினை உள்ளது என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவ்வாறில்லை. திட்டங்கள் தொடர்பில் விளக்கமின்மை இருந்தால் நாம் கதைத்து புரிந்துணர்வுக்கு வரமுடியும். ரஷ்யாவுடனான எமது உறவு நல்ல முறையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.