இலங்கை அரசின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்ப்பு மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷா பல்பிட ஆகியோருக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் அவர்களைக் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தத் தவறியது ஏன் என்பது குறித்து தம்மிடம் விளக்கமளிக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் காவல்துறை நிதி மோசடிப்பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது 600 மில்லியன் ரூபா அரச நிதியை அப்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள லலித் வீரதுங்க மற்றும் அனுஷா பல்பிட்ட ஆகிய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமாஅதிபர் நேற்று புதன்கிழமை நேரடியாக மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
ஆனால் அரச சொத்துக்கள் தொடர்பான சட்டத்துக்கு அமைய இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் நபர்கள் காவல்துறையினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவது அவசியமென்று மாஜிஸ்ட்ரேட் நீதிபதி இன்று தெரிவித்தார்.
அப்படி செய்யாமல், லலித் வீரதுங்க மற்றும் ஆஷா பல்பிட ஆகிய சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்போலீசார் தவறியமை குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய நீதிபதி நிஷாந்த பிரிஸ இதன் முலம் காவல்துறையினர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்தார்.
எனவே இந்த வழக்கில் தமது செயற்பாடு குறித்து அடுத்த மாதம் ஐந்தாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தருமாறு நீதிபதி நிஷாந்த பிரிஸ் காவல்துறையின் நிதி மோசடிப்பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.