லிபியாவில் அரசுக்கும், முஸ்லிம் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. சமீபத்தில் தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை போராளிகள் கைப்பற்றினர்.
அப்போது நடந்த சண்டையில் 15–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து திரிபோலியில் உள்ள தனது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அமெரிக்கா மால்டாவில் உள்ள வல்லெட்பாவுக்கு மாற்றியது.
அலுவலகம் மட்டும் மாற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று அமெரிக்க தூதரக அலுவலகத்தை போராளிகள் கைப்பற்றினர். அந்த வீடியோ காட்சிகள் ஆன்லைனில் ஒளிபரப்பாயின.
இதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிசெய்தனர். அதுபற்றிய விவரங்களை லிபியா அரசிடம் இருந்து எதிர்ப்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திரிபோலியில் உள்ள அரசு, அரசு அலுவலங்களையும் போராளிகள் நேற்று கைப்பற்றினர்.
ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளித்த அவர்கள் உயர் அதிகாரிகளை மிரட்டினர். லிபியாவில் கடந்த வாரம் அரசு பதவி விலகியது. தற்போது பிரதமர் அப்துல்லா அல்–தானி தலைமையில் இடைக்கால அரசு பதவி வகிக்கிறது.