அமைச்சர் ஹலீமிடம் கோரிக்கை
வக்பு சொத்துகள் சட்டத்திற்கு முரணாக கையாளப்பட்டு வருவதைத் தடைசெய்வதற்காக சொத்துகளை வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக அரபு மத்ரஸாக்களும் அவற்றுக்குரிய வக்பு சொத்துக்களும் வக்பு சபையில் பதிவு செய்யப்படாததால் மத்ரஸா வக்பு சொத்துக்கள் பலவற்றில் முறையீனங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் வக்பு சொத்துக்களைப் பராமரிப்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அரபு மத்ரஸாக்கள் வக்பு சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டால் அவற்றின் சொத்துக்களை வக்பு சபையால் கண்காணிக்கக் கூடியதாகவும் ஊழல்கள் நடைபெற்றால் சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் மத்ரஸாக்களின் வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள் முறையீனமாக கையாளப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்நிலைமையை தவிர்ப்பதற்கு அனைத்து அரபு மத்ரஸாக்களும் வக்பு சபையில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.