Breaking
Wed. Dec 25th, 2024

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பிலான சி.சி.டி.வி கமெராவின் காட்சிகள் தொடர்பில், அடுத்த 14 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ், கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு நேற்று (10) கட்டளையிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பிலான காட்சிகள் அடங்கிய இறுவட்டுகள் (சீடி) நான்கு, பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வாகனம், அங்கிங்கும் பயணம் செய்வதுபோன்ற காட்சிகளும் அதில் இருக்கின்றன என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதேவேளை, இந்தக் கொலை தொடர்பாக, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க மற்றும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரை விசாரணை செய்யுமாறு நீதிமன்றம், குற்றப்புலனாய்வு அதிகாரிகளை பணித்துள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், சந்தேகத்துக்கிடமாகவுள்ள இந்த வழக்குத் தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்குப் போதியளவான அதிகாரிகள் இல்லாவிடின், தேவையான அதிகாரிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, நீதவான் கட்டளையிட்டார்.

ஆரம்ப பிரேத பரிசோதனை அறிக்கை, இரண்டரை வருடங்கள் காலதாமதமாகியமை சிக்கலான விடயமாகும் என்று சுட்டிக்காட்டிய நீதவான், தாஜுதீனின் ஜனாஸாவில் இருந்த பாகங்கள் காணாமல் போனவை தொடர்பில், விசாரணைகளை நடத்துமாறு வைத்திய சபைக்குக் கட்டளையிட்டார்.

இது, வாகன விபத்தொன்றில் நிகழ்ந்தது அல்ல என்று தோன்றுகின்றது என்று சுட்டிகாட்டிய அவர், சகல அறிக்கைகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தி, அடுத்த தினத்தன்று கட்டளையிடுவதாக தெரிவித்த நீதவான், இந்த வழக்கை ஜனவரி மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். (tm)

By

Related Post