Breaking
Thu. Nov 14th, 2024

மூஸா (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் தொடர்ந்தது. மூஸா (அலை) சொன்னதை அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர வேறு யாரும் நம்பிக்கை கொள்ளவில்லை. ஏனெனில், ஃபிர்அவ்னும் அவனுடைய பிரமுகர்களும் அவர்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக.

மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் இறைவனின் கட்டளையின்படி வீட்டையே பள்ளிவாசல்களாக மாற்றி தொழுதார்கள். உலக வாழ்க்கை சுகங்களான செல்வங்களும் ஆடம்பரங்களும் ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய கூட்டத்தாருக்கும் இல்லாமல் போய், வேதனைகளை சுவைத்தால்தான் அவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள் என்று மூஸா மற்றும் ஹாரூன் (அலை) இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

இறைவன் அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்களின் விளைச்சலில் பிரச்சனையை ஏற்படுத்தினான். இருப்பினும் அவர்கள் திருந்தவில்லை. அவர்கள் அது இறைவன் தந்த சோதனையாக எண்ணவில்லை, மூஸா (அலை) அவர்களின் சூனியத்தின் சூழ்ச்சியாக எண்ணினார்கள்.

கனமழையைப் பொழிந்து நைல் நதியின் நீர் மட்டத்தை உயர்த்தி வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தி எல்லாவற்றையும் அழித்தான் இறைவன். ஆனால் பனூ இஸ்ராயீலர்களின் பகுதியில் எந்தச் சேதமுமில்லை.

உடனே ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் மூஸா (அலை) அவர்களிடம் தங்களுக்காகப் பிரார்த்திக்கும்படியும், ஆபத்து நீங்கிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்வதாகவும் பனூ இஸ்ராயீலர்களை அவருடன் அனுப்பி வைப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர். அவர்களை நம்பிய மூஸா (அலை) அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்து, கனமழையை நிறுத்தி மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு  மாற்றினார்கள். ஆனாலும் அவர்கள் தம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

அடுத்த சோதனையாக வெட்டுக்கிளியை இறைவன் அனுப்பினான். அந்த வெட்டுக்கிளிகள் வீட்டுத் தூண்களையும் அரித்து வீடு இடிந்து விழுவதும், விளைச்சல்களை நாசமாக்குவதுமாக இருப்பதைக் கண்ட மக்கள் பீதியடைந்து மறுபடியும் மூஸா (அலை) அவர்களிடம் வந்து, இறைவனிடம் பிரார்த்திக்கும்படியும், இம்முறை வாக்கு மாறாமல் ஓரிறைக் கொள்கையை ஏற்பதாகவும் சொன்னதை நம்பி,  மறுபடியும் மூஸா (அலை) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். வெட்டுக்கிளிகள் வந்த வழியே மறைந்தன. ஃபிர்அவ்ன் கூட்டத்தினரின் வாக்குறுதிகளும் மறைந்து போயின.

இன்னும் கொஞ்சம் காலம் சென்ற பிறகு இறைவன் பேன்களின் மூலம் நம்பிக்கையற்றக் கூட்டத்தாருக்கு வேதனையைத் தந்தான். எல்லா பக்கங்களிலும் பேன்கள் வழிந்து இயல்பு வாழ்க்கையை நாசமாக்கியது. சாப்பிட வாய் திறந்தாலும் வாய்க்குள் போனது. தூங்கவிடாமல் தொந்தரவு தந்தது. மறுபடியும் ஃபிர்அவ்னின் சமூகத்தார் மூஸா (அலை) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தங்களுக்காக பிரார்த்திக்கும்படி கெஞ்சினார்கள். அல்லாஹ்வை நம்புவதாகவும், பனூ இஸ்ராயீலர்களை உடனே அனுப்பிவிடுவதாகவும் சொன்னார்கள்.

எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் மூஸா (அலை) அவர்கள் மக்களின் கெஞ்சலுக்குச் செவிசாய்த்தார்கள்.

இம்முறை மக்கள் மூஸா (அலை) அவர்களை ஏமாற்றினார்களா, அல்லது ஃபிர்அவ்னை எதிர்த்து மக்கள் மனம் மாறினார்களா!?

அவர்களின் இருதயம் பூட்டப்பட்டதாக முத்திரையிடப்பட்டதாக இருப்பின், அவர்கள் எவ்வித அதிசயங்களைக் கண்களால் பார்த்தாலும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

By

Related Post