தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வடகொரியா தொடர்பில் முத்தரப்பு புலனாய்வுத் தகவல்கள் பகிர்வு ஒப்பந்தம் ஒன்றில் திங்கட்கிழமை கைச்சாத்திடவுள்ளன.
இதற்கு முக்கிய காரணமாக அதிகரித்து வரும் வடகொரியாவின் இராணுவ அச்சுறுத்தல்கள் விளங்குவதாக இன்று வெள்ளிக்கிழமை சியோல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே இவ்வாறான உடனடி முத்தரப்பு புலனாய்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப் படுவது இதுவே முதற் தடவை என்பதுடன் இதற்குப் பின்புலத்தில் வடகொரியாவின் இராணுவ ஆத்திரமூட்டல்களே திகழ்வதாக அறிவிக்கப் பட்டுள்ளது. குறித்த புலனாய்வு ஒப்பந்தம் இம்மூன்று நாடுகளையும் சேர்ந்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்களால் கைச்சாத்திடப் படவுள்ள நிலையில் இதன் மூலம் வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களை வாஷிங்டனின் ஊடாக சியோல் மற்றும் டோக்கியோ நிர்வாகங்கள் பகிர்ந்து கொள்ளும் வழி திறக்கப் படும் எனவும் கருதப் படுகின்றது.
வடகொரியா முதன் முறை தனது அணுவாயுதப் பரிசோதனையை 2006 ஆம் ஆண்டும் பின்னர் 2 ஆவது பரிசோதனையை 2009 ஆம் ஆண்டும் 3 ஆவது பரிசோதனையை 2013 ஆம் ஆண்டும் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் சியோல் பாதுகாப்பு அமைச்சுக் கூறுகையில், வடகொரியாவில் இருந்து திடீர் இராணுவ அச்சுறுத்தல்கள் எந்நேரமும் வெளிப்படலாம் எனவும் வடகொரியா தற்போது அமெரிக்க மண்ணிலும், தென்கொரியா மற்றும் ஜப்பானிலும் எத்தருணத்திலும் ஏவுகணைகள் மூலம் தாக்கும் திறனைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளாக தென்கொரியாவும், ஜப்பானும் விளங்குகின்றன. இதற்கு முன்னர் இவ்விரு நாடுகளும் தனித்தனியாக அமெரிக்காவுடன் இரு தரப்பு புலனாய்வுப் பகிர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன. மேலும் இவ்விரு நாடுகளிலும் சுமார் 10 000 அமெரிக்கத் துருப்புக்கள் வரை தற்போது தங்கியுள்ளன. ஆனால் தென் சீனக் கடலில் சில தீவுகளைச் சொந்தம் கொண்டாடும் விவகாரம் உட்பட சில காரணிகளால் இதுவரை ஜப்பானும் தென்கொரியாவும் தமக்கிடையே எந்தவொரு இருதரப்பு இராஜதந்திர ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவில்லை என்பதும் நோக்கத்தக்கது.
1910 ஆம் ஆண்டு முதல் சுமார் 35 வருடங்களுக்கு கொரியத் தீபகற்பத்தைத் தனது காலனியாக ஜப்பான் ஆண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.